
இரட்டை இலை சின்னத்தை, அதிமுகவின் எந்த அணிக்கு ஒதுக்குவது என்பது குறித்து அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் முடிவெடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அதிமுக அணிகளாக பிளவுபட்டது. சென்னை, ஆர்.கே. நகர் தேர்தலின்போது, இரட்டை இலை சின்னம் தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்டது.
இதையடுத்து, எடப்பாடி பழனிசாமி அணியும், ஓ.பன்னீர்செல்வம் அணியும் அண்மையில் இணைந்தன. இந்த இணைப்புக்குப் பிறகு, தேர்தல் ஆணையத்தில் அளித்த பிரமாணப் பத்திரத்தை வாபஸ் பெற்றனர்.
ஆனால், டிடிவி தினகரன் தரப்பினர், இரட்டை இலை சின்னத்தை பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இது தொடர்பான வழக்கு விசாரணையின்போது, இரட்டை இலை சின்னத்தை அதிமுகவின் எந்த அணிக்கு ஒதுக்குவது என்பது குறித்து அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் முடிவெடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது.
அதிமுகவின் இரு அணிகளும் கால அவகாசம் கேட்டு வருவதால் சின்னம் ஒதுக்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் கூறியுள்ளது.