
கள்ளநோட்டு அச்சடித்தது மட்டுமல்லாமல், அதனை ஏ.டி.எம். இயந்திரத்தில் டெபாசிட் செய்த 3 பேரை தேனி போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்த ரூ.18,48,000 மதிப்புள்ள கள்ளநோட்டுக்கள், பிரிண்டர் உட்ளளிட்டவைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
தேனியில் உள்ள தனியார் வங்கி ஏ.டி.எம். மையத்தில் பணம் செலுத்தும் இயந்திரத்தில் டெபாசிட் செய்யப்பட்ட ரூ.48 ஆயிரம் கள்ளநோட்டுகள் என்பதை வங்கி அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
ஏ.டி.எம். இயந்திரத்தில் கள்ளநோட்டு டெபாசிட் செய்தது குறித்து, வங்கி மேலாளர், போலீஸ் நிலையத்தில் புகார் கூறினார். இதையடுத்து, ஏ.டி.எம். மையத்தில் இருந்த சிசிடிவி கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர்.
கடந்த 6 ஆம் தேதி அன்று, வத்தலகுண்டைச் சேர்ந்த ஜஹாங்கீர், போடியைச் சேர்ந்த அப்பாஸ், கதிரவன் ஆகியோர் கள்ளநோட்டுகள் டெபாசிட் செய்திருப்பதைக் கண்டுபிடித்தனர். இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து கள்ளநோட்டு அச்சடிக்க பயன்படுத்திய பிரின்டர் மற்றும் ரூ.18 லட்சத்து 48 ஆயிரம் மதிப்புள்ள 500, 2000 ரூபாய் கள்ள நோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கடந்த வாரம் கம்பத்தில் கள்ளநோட்டு வைத்திருந்ததாக 5 பேரை போலீசார் கைது செய்திருந்த நிலையில், கள்ளநோட்டை டெபாசிட் செய்த மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இது குறித்து போலீசார் கூறும்போது, கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இவர்களுக்கும் கம்பத்தில் கைதானவர்களுக்கும் தொடர்பு உள்ளதா? இருவரும் ஒரே கும்பலைச் சேர்ந்தவர்கள்தானா? என்பது குறித்தும் விசாரிக்கப்பட்டு வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.