
5 நாள் தொடர் விடுமுறை காரணமாக, சுற்றுலா தலங்களில் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. இதனால், சுற்றுலா தலங்கள் களைகட்டி உள்ளது.
சனி, ஞாயிறு, ஆயுதபூஜை, விஜயதசமி மற்றும் மொகரம் பண்டிகையையொட்டி, 5 நாள் தொடர் பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், சுற்றுலா தலங்களில் தங்களது குடும்பத்துடன் பொதுமக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் நேற்று கட்டுக்கடங்காமல் இருந்தது.
ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தொட்டபெட்டா காட்சி முனை உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் பயணிகளின் வருகை நேற்று அதிகரித்தது. இதனால், கமர்சியல் சாலை, எட்டின்ஸ் சாலை, கோத்தகிரி சாலை, குன்னூர் சாலை உள்ளிட்ட சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
போதிய பார்க்கிங் வசதிகள் இல்லாததால் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் தங்களது வாகனங்களை சாலையோரங்களில் நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து கொண்டே போகிறது.
மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் அதிகளவு வந்ததால், வாகனங்கள் நெரிசலில் திணறின. இதனால், சுற்றுலாப் பயணிகள் பல மணிநேரத்தை வாகனங்களிலேயே கழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
அனுமதியின்றி இயங்கும் தங்கும் விடுதிகள், சுற்றுலாப் பயணிகளின் கூட்டத்தைக் கண்டு 5 மடங்கு வரை கட்டணத்தை உயர்த்தி வசூலித்தன. வாகன நிறுத்தங்களிலும், பார்க்கிங் கட்டணம் என்ற பெயரில் சுற்றுலாப் பயணிகளிடம் வசூல் வேட்டை நடத்தப்பட்டது.
சாதாரண நாட்களில் இருக்கும் நிலைபோல் நினைத்து பட்ஜெட் போட்டு வந்த சுற்றுலாப் பயணிகள், எங்கு பார்த்தாலும் கட்டணக் கொள்ளையால் கொடைக்கானலை ஒரே நாளில் காலி செய்துவிட்டு கிளம்பினர்.
கன்னியாகுமரிக்கு நேற்று முன்தினம் முதல் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். நேற்று அதிகாலை சூரிய உதயத்தை கண்டுகளித்த சுற்றுலா பயணிகள், திரிவேணி சங்கமத்தில் குளித்து மகிழ்ந்து, பகவதி அம்மனை ஜாதி, மத வேறுபாடின்றி வரிசையில் நின்று தரிசித்து சென்றனர்.
திரிவேணி சங்கம கடற்கரை, காந்தி, காமராஜர் மணி மண்டபங்கள், காட்சி கோபுரம், சன்-செட் பாயின்ட் உள்ளிட்ட பகுதிகளிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டமாகவே இருந்தது. மேலும் படகு டிக்கெட் வாங்க நீண்ட வரிசையில் காத்து நின்று விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு சென்று பார்வையிட்டனர். இதனால் நகர பகுதியில் போக்குவரத்து நெரிசலும் கணிசமாக காணப்பட்டது.