
அரியலூர்
அரியலூர் மாவட்ட ஆட்சியர் க.லட்சுமிபிரியா நேற்று செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டார்.
அதில், "உள்ளாட்சி அமைப்புகளுக்கான கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சி, பேரூராட்சி மற்றும் நகராட்சி வரைவு வார்டு மறுவரையறை குறித்த ஆட்சேபனைகள், கருத்துகளை அரசியல் கட்சிகள் மற்றும் மக்கள் 12.1.2018 அன்று மாலை 5 மணிக்குள் தொடர்புடைய உள்ளாட்சி அமைப்புகளின் வார்டு மறுவரையறை அதிகாரிக்கு எழுத்து மூலமாகத் தெரிவிக்கலாம்.
மறுவரையறை ஆணையத்தால் நடத்தப்படும் மண்டல வாரியான ஆலோசனைக் கூட்டத்தில் கருத்து பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
அச்சமயம், ஆட்சேபணை அல்லது கருத்து தெரிவித்தவர்கள் நேரடியாக ஆய்வின்போது ஆஜராகி தங்களின் கோரிக்கையை எடுத்துரைக்கலாம்" என்று மாவட்ட ஆட்சியர் க.லட்சுமிபிரியா அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே நடந்த ஊரக உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான வார்டு மறுவரையறை வரைவு கருத்து கேட்புக் கூட்டத்தில் வார்டு மறுவரையறை குறித்து ஆட்சேபணை தெரிவிக்க 1 மாத காலம் அவகாசம் அளிக்க வேண்டும் என அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளன என்பது குறிப்பிடத்தகக்து.
மேலும், வார்டு மறுவரை விவரங்களை அரசியல் கட்சியினருக்கு அளிக்க வேண்டும் என்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் தெரிவித்திருந்தனர்.