மற்ற கட்சிகளை போல எஸ்.எம்.எஸ். மூலம் காங்கிரசு தொண்டர்களை சேர்ப்பது இல்லை – சஞ்சய்தத்…

First Published Jul 8, 2017, 7:08 AM IST
Highlights
congress does not join members via Sms like other parties - Sanjay Dutt


விருதுநகர்

மற்ற கட்சிகளை போல எஸ்.எம்.எஸ். மூலம் காங்கிரசு தொண்டர்களை சேர்ப்பது இல்லை. உண்மையான ஆர்வமும், கட்சியின் மீது விசுவாசம் கொண்டவர்களையே உறுப்பினர்களாக சேர்க்கிறோம் என்று காங்கிரசு மேலிட பார்வையாளரும், மராட்டிய மாநில மேலவை உறுப்பினருமான சஞ்சய்தத் தெரிவித்தார்.

விருதுநகர் மாவட்டத்தில் காங்கிரசு கட்சியினரின் கூட்டம் நடைப்பெற்றது. இதற்கு சிறப்பு விருந்தினராக தலைமையேற்று காங்கிரசு நிர்வாகிகளுக்கு உறுப்பினர் சேர்க்கை படிவங்களை வழங்கினார் காங்கிரசு மேலிட பார்வையாளரும், மராட்டிய மாநில மேலவை உறுப்பினருமான சஞ்சய்தத்.

இக்கூட்டத்தில் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் பாலகிருஷ்ணன் தமிழ் மாநில காங்கிரசு கட்சியில் விலகியும், அதிமுக. பிரமுகர் ராஜேஷ் கட்சியில் இருந்து விலகியும் சஞ்சய்தத் முன்னிலையில் காங்கிரசு கட்சியில் சேர்ந்தனர்.

கூட்டத்திற்கு பிறகு சஞ்சய்தத் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அதில், “தமிழகத்தில் தற்போது உள்ள அரசியல் சூழ்நிலையில் காங்கிரசு வலுப்பெற அதிக வாய்ப்புள்ளது. அதனால் காங்கிரசு மேலிடம் மாநிலம் முழுவதும் உறுப்பினர் சேர்க்கையை தீவிரபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்காக நானும், பப்பிராஜ் என்பவரும் மேலிட பார்வையாளராக நியமிக்கப்பட்டு உள்ளோம்.

நான் தமிழகத்தின் மேற்கு மற்றும் தென் மாவட்டங்களில் உறுப்பினர் சேர்க்கை பணியை தீவிரப்படுத்த வந்துள்ளேன். நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு சென்று வந்தேன். காங்கிரசு தொண்டர்களிடையே எழுச்சி உள்ளது.

மற்ற கட்சிகளை போல எஸ்.எம்.எஸ். மூலம் காங்கிரசு தொண்டர்களை சேர்ப்பது இல்லை. உண்மையான ஆர்வமும், கட்சியின் மீது விசுவாசம் கொண்டவர்களையே உறுப்பினர்களாக சேர்க்கிறோம்.

காங்கிரசு தொண்டர்கள் மக்களுடன் நெருங்கி பழகி அவர்களின் பிரச்சனைகளை தீர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்றே கட்சியின் தலைவர் சோனியாகாந்தியும், துணைத் தலைவர் ராகுல்காந்தியும் அறிவுறுத்தியுள்ளனர். அதனையே நானும் காங்கிரசு தொண்டர்களிடையே வலியுறுத்தி வருகிறேன்.

தமிழக காங்கிரசில் கோஷ்டிகள் உள்ளதாக பேசப்படுகிறது. ஜனநாயக பாதை கொண்ட காங்கிரசு போன்ற பெரிய கட்சியில் கருத்து சுதந்திரம் உள்ளதால் அவரவர்கள் தங்கள் கருத்துக்களை சொல்ல உரிமை உண்டு. ஆனால், கட்சியின் தலைமை ஒரு முடிவு எடுத்துவிட்டால் அந்த முடிவுக்கு கட்டுப்பட்டு கட்சியின் வலுவான தூண்களாக மாநிலத்தில் உள்ள காங்கிரசு தலைவர்கள் செயல்பட வேண்டும்.

தற்போது உள்ள அரசியல் சூழ்நிலையில் காங்கிரசு தொண்டர்களின் அயராத பணியால் அடுத்து வர இருக்கின்ற தேர்தல்களில் பெரிய வெற்றியை பெற வாய்ப்புள்ளது.

காங்கிரசு மற்றும் எதிர்க்கட்சிகள் சார்பில் நிறுத்தப்பட்டுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர் மீராகுமார் அந்த பதவிக்கு மிகவும் தகுதியானவர். கடந்த காலங்களில் அவர் தனது தகுதியை பலமுறை நிரூபித்துள்ளார். எனவே ஜனாதிபதி தேர்தலில் அவர் வெற்றி பெற வாய்ப்புள்ளது” என்று அவர் தெரிவித்தார்.

இந்தப் பேட்டியின்போது காங்கிரசு தேசிய செயலாளர் மாணிக்கம்தாகூர், மாநில செயலாளர் அருள்பெத்தையா, முன்னாள் மாநில மாணவர் காங்கிரசு தலைவர் நவீன், மாவட்ட தலைவர்கள் ராஜாசொக்கர், தளவாய்பாண்டியன் ஆகியோர் உடன் இருந்தனர்.

click me!