
இராமநாதபுரம்
கடலில் நாட்டுப்படகு மீனவர்களும், விசைப்படகு மீனவர்களும் சண்டைப் போட்டுக் கொண்டதால் விசைப்படகு ஒன்று மூழ்கடிக்கப்பட்டது இதனால், கடலில் குதித்த 16 மீனவர்கள் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும்போது பத்திரமாக மீட்கப்பட்டனர்.
இராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடி அருகே சின்ன ஏர்வாடி கடல் பகுதியில் சில விசைப்படகுகள் விதிமுறைகளை மீறி மீன்பிடித்துக் கொண்டிருப்பதாக, நாட்டுப்படகு மீனவர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதன்பேரில், நாட்டுப்படகு ஒன்றில் சென்ற மீனவர்கள், கீழக்கரை அலிகான் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகை பிடித்து கரைக்கு இழுத்து வந்தனர். அப்போது அவர்களிடம், விசைப் படகில் பலர் மீன்பிடித்துக் கொண்டிருக்கும்போது என்னை மட்டும் ஏன் பிடித்து வந்தீர்கள்? என்று அலிகான் கேட்டுள்ளார்.
உடனே, விசைப்படகில் அலிகானுடன் இருந்த மற்றொரு மீனவர் மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் 14 பேர் என மொத்தம் 16 மீனவர்கள் மீண்டும் கடலுக்குள் சென்றனர். அங்கு, விதிமுறை மீறி மீன்பிடித்துக் கொண்டிருந்த விசைப் படகுகளின் எண்களை குறித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது, ஒரு விசைப்படகு திடீரென அலிகானின் விசைப்படகு மீது மோதியதில் அவரது விசைப் படகு கவிழ்ந்து கடலில் மூழ்கியது. உடனே, படகிலிருந்த 16 மீனவர்களும் கடலில் குதித்து மூன்று மணி நேரத்துக்கும் மேலாக உயிருக்குப் போராடியுள்ளனர்.
அதனையடுத்து, அவ்வழியே நாட்டுப் படகில் வந்த மீனவர்கள் தத்தளித்துக் கொண்டிருந்த மீனவர்களை காப்பாற்றி கரை சேர்த்தனர். 16 மீனவர்களும் நல்ல வேளையாக உயிர் தப்பினர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக, நாட்டுப் படகு மீனவர்கள் சங்க நிர்வாகிகள் தேவிபட்டினம் கடலோரக் காவல் குழும காவலாளர்களிடம் புகார் அளித்தனர்.
“விசைப்படகு மீனவர்கள் விதிமுறைகளை மீறி கடலில் மீன் பிடிப்பதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்ற நாட்டுப் படகு மீனவர்களின் புகாரின்பேரில், இராமநாதபுரம் மீன்வளத் துறை அலுவலர் அலுவலகத்தில் இரு தரப்பு மீனவர்களுக்கும் இடையே சமாதானப் பேச்சுவார்த்தை நேற்று மாலை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்துக்கு, மீன்வளத் துறை துணை இயக்குநர் ஐசக் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். பேச்சுவார்த்தையின் இறுதியில், “இராமேசுவரத்தில் பாக் நீரிணை பகுதியில் தற்போது செயல்படுத்தப்பட்டு வருவதைப் போல், மூன்று நாள்கள் விசைப்படகு மீனவர்களும், நான்கு நாள்கள் நாட்டுப்படகு மீனவர்களும் கீழக்கரை, ஏர்வாடி பகுதி கடலில் மீன்பிடித்துக் கொள்வது” என்று முடிவெடுக்கப்பட்டது.