ஒரே நேரத்தில் 100-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை விடுதலை செய்கிறது இலங்கை அரசு...

First Published Feb 10, 2018, 11:37 AM IST
Highlights
Sri Lankan government releases over 100 Tamil Nadu fishermen simultaneously


இராமநாதபுரம்

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 113 பேரை ஒரே நேரத்தில் விடுதலை செய்யப்பட இருக்கிறார்கள் என்று தமிழ்நாடு எந்திர படகு மீனவர்கள் சங்கத்தின் தலைவர் பி.சேசுராஜா தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இராமேசுவரம் பகுதியில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் செல்கிற மீனவர்கள், எல்லைத் தாண்டி வந்து மீன்பிடிப்பதாக குற்றம் சாட்டி இலங்கை கடற்படையினர் அத்துமீறி கைது செய்து வருகின்றனர்.

கைது செய்யப்படுப்வர்கள் அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்படுகிறார்கள். அவர்களது படகுகளையும் பறித்துக்கொண்டும், ஈவு இரக்கமின்றி சேதப்படுத்தியும் அட்டூழியத்தில் ஈடுபடுகிறது.

மீனவர்கள் இலங்கையால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கும்போதெல்லாம் நரேந்திர மோடிக்கு தமிழக அரசு கடிதம் எழுதி வருவதை வாடிக்கையாக இருக்கிறது. தமிழக அரசால் அதிகபட்சமாக செய்ய முடிந்தது அதுமட்டும்தான்போலும்.

இந்த நிலையில், அங்கு சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 113 பேரை விடுதலை செய்வதற்கு அதிபர் சிறிசேனா அரசு பரிந்துரை செய்துள்ளது. இவர்கள் கடந்த மாதம் வரை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்கள்.

இது தொடர்பாக தமிழ்நாடு எந்திர படகு மீனவர்கள் சங்கத்தின் தலைவர் பி.சேசுராஜா கூறியதாவது:

“தமிழக மீனவர்கள் 113 பேரை விடுதலை செய்வதற்கு இலங்கை அரசு சிபாரிசு செய்துள்ளது. அவர்களில், ஒரு மீனவரின் மகன் இறந்து விட்டதால் அவரையும், அவரது உறவினர்கள் மூன்று பேரையும் அவசரமாக விடுதலை செய்ய கோரப்பட்டது. அவர்களை யாழ்ப்பாணம் நீதிமன்றம் விடுதலை செய்துவிட்டது.

எஞ்சிய 109 மீனவர்கள் நீதிமன்ற நடவடிக்கைக்கு பின்னர் அடுத்த சில நாட்களில் விடுதலை செய்யப்பட்டு விடுவார்கள்” என்று அவர் கூறினார்.

ஜெயசீலன் என்ற மீனவரின் மகன் இறந்து விட்டதால் அவரையும், அவரது உறவினர்கள் மூன்று பேரையும் உடனே விடுதலை செய்யுமாறு இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் வேண்டிக்கொண்டதன் பேரில் அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த டிசம்பர் மாதம் தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 89 மீனவர்களை இலங்கை மொத்தமாக விடுதலை செய்தது நினைவுகூரத்தக்கது. அதன்பின்னர் இப்போதுதான் ஒரே நேரத்தில் 100-க்கும் மேற்பட்ட மீனவர்கள் விடுதலை செய்யப்படுவது என்பது கூடுதல் தகவல்.

click me!