
தனது பதவி காலம் நீட்டிக்க அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் சேதுராமன் லஞ்சம் கேட்பதாக சட்ட அமைச்சரிடம் சென்னை நகர அரசு வக்கீல் எம்.எல்.ஜெகன் புகார் மனு அளித்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா பதவி காலம் நீட்டிக்க தன்னிடம் லஞ்சம் கேட்பதாக குழந்தை நல பெண் அதிகாரி மீனாட்சி என்பவர் பரபரப்பு குற்றசாட்டை மீடியாக்கள் முன் வைத்தார்.
இதுகுறித்து கமிஷனர் அலுவலகத்திலும் மீனாட்சி புகார் அளித்தார். ஆனால் அமைச்சர் சரோஜா அதற்கு மறுப்பு தெரிவித்தார்.
இந்நிலையில், தற்போது அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் மீது அரசு வழக்கறிஞர் ஒருவர் புகார் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞராக பணிபுரிபவர் சேதுராமன். அதேபோல், சென்னை நகர அரசு வழக்கறிஞராக பணியாற்றுபவர் எம்.எல்.ஜெகன்.
தன்னுடைய அரசு வழக்கறிஞர் பதவியில் தொடர சேதுராமன் 25 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்பதாகவும், பணம் வாங்கி கொண்டு அதிமுகவில் இல்லாதவர்களையும் அரசு வக்கீலாக நியமித்துள்ளதாகவும், எம்.எல்.ஜெகன் குற்றம் சாட்டியுள்ளார்.
சேதுராமனின் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தாவிட்டால் பெரும் பிரச்சனைகள் ஏற்படும் என புகார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சட்ட அமைச்சர் சண்முகத்துக்கு எம்.எல்.ஜெகன் கடிதம் எழுதியுள்ளார். மேலும் இதன் நகலை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஜெகன் அனுப்பியுள்ளார். இதனால் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு நிலவுகிறது.