நாடார் சமூகத்தை இழிவுபடுத்திய மதபோதகர்... காவல் நிலையத்தில் விக்கிரமராஜா புகார்!!

By Narendran SFirst Published Nov 26, 2021, 4:14 PM IST
Highlights

ஒரு குறிப்பிட்ட சமூகத்தை குறிப்பிட்டு கலவரத்தை துாண்டும் விதமாக பேசிய பெண் மதபோதகர் மீது தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா டி.ஜி.பி., அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். 

ஒரு குறிப்பிட்ட சமூகத்தை குறிப்பிட்டு கலவரத்தை துாண்டும் விதமாக பேசிய பெண் மதபோதகர் மீது தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா டி.ஜி.பி., அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். சென்னை அடுத்த குன்றத்தூரில் உள்ள சி.எஸ்.ஐ உயிர்ந்தெழுந்த மீட்பர் தேவாலயத்தில் பிரார்த்தனை கூட்டம் நடைபெற்றது. இதில் பெண் மத போதகர் பியூலா செல்வராணி என்பவர் பெண்களின் பாதுகாப்பு குறித்து பேசினார். அப்போது, பெண்களுக்கு குடும்பத்தில் பாதுகாப்பில்லை என்றும்  பள்ளிக்கூடங்களில் சுத்தமாக பாதுகாப்பில்லை என்றும் குறிப்பிட்டார். மேலும் தனது கணவர் பள்ளியில் ஆசிரியராக இருப்பதாகவும், இருந்தாலும் பள்ளிகளிலும் பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பில்லை என்றும், ஆண் ஆசிரியர்களிடம் மட்டுமல்ல பெண் ஆசிரியைகளிடம் இருந்தும் பிள்ளைகளுக்கு பாதுகாப்பில்லை என்றும் அவர் தெரிவித்தார். அதன் தொடர்ச்சியாக ஒரு சமூகத்தின் பெயரை சொல்லி அவர்களது கடைகளுக்கு பொருள் வாங்கச்செல்லும் சிறுமிகளிடம் பொருட்கள் கொடுக்கும் போது அந்த கடைக்காரர் சிறுமிகளிடம் அத்துமீறுவதாக கூறினார். அவரது இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

பியூலாவின் இந்த வீடியோ வைரலான நிலையில், மத போதகர் பியூலா செல்வராணி மீது நடவடிக்கை எடுக்க கோரி, பல்வேறு வியாபார அமைப்புகள் குன்றத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகார் குறித்து போலீசார் விசாரித்து வந்த நிலையில், வருகின்ற ஞாயிற்றுக்கிழமை பியூலாவை கைது செய்யக் கோரி போராட்டம் நடத்த போவதாகவும் அறிவித்தனர். இதற்கிடையே பியூலா செல்வராணி மீது தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா டி.ஜி.பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரில், காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்துாரில், சி.எஸ்.ஐ., கிறிஸ்துவ தேவாலயத்தில், பாதிரியார் சாமுவேல் முன்னிலையில் நடந்த ஆராதனை கூட்டத்தில், மத போதகர் பியூலா செல்வராணி, வியாபாரிகளை ஆபாசமாக சித்தரித்து பேசியுள்ளார் என்றும் குறிப்பாக நாடார் இன துவேஷத்தை முன்னிலைப்படுத்தியும், கலவரத்தை துாண்டும் விதமாகவும் அவர் பேசிய, 'வீடியோ' சமூக வலைதளங்களில் பரவி வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் பியூலா செல்வராணியின் பேச்சு, அடித்தட்டு, உழைத்து முன்னேறும் வியாபாரிகளுக்கு எதிராகவும், ஜாதிய இனவெறியை துாண்டும் விதமாகவும் உள்ளது என்று குறிப்பிட்டுள்ள அவர், அவரது பேச்சுக்கு, பாதிரியார் சாமுவேல் வருத்தம் தெரிவிக்காதது மிகுந்த வேதனைக்குரியது என்றும் இச்சம்பவம், வேண்டுமென்றே விஷத்தை துாவும் விதமாகவும் உள்ளது என்றும் குற்றம்சாட்டியிருந்தார். மேலும் இதுக்குறித்து விசாரணை நடத்தி, விஷம பிரசாரம் பரவவிடாமல் தடுக்க வேண்டும் என்றும் பியூலா செல்வராணி மற்றும் சாமுவேலை கைது செய்து நீதியை நிலை நாட்ட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.  இதேபோல் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை பற்றி அவதுாறாக பேசிய பெண் மத போதகர் பியூலா செல்வராணி, சர்ச் பாதிரியார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென காமராஜர் மக்கள் பாதுகாப்பு பேரவையினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். 

click me!