கோயம்புத்தூர் மாவட்டத்துக்கு இந்தாண்டு கொடிநாள் நிதி வசூல் இலக்கு ரூ.90 இலட்சமாம் - வருவாய் அதிகாரி சொல்றாரு...

First Published Dec 8, 2017, 7:26 AM IST
Highlights
Coimbatore District This year flag day collection target of Rs.90 lakhs - Revenue Officer ...


கோயம்புத்தூர்

கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு இந்தாண்டு கொடி நாள் நிதி வசூல் இலக்கு ரூ.90 இலட்சத்து 76 ஆயிரத்து 200 என்று மாவட்ட வருவாய் அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும், கூடுதலான நிதி வழங்க வேண்டும் என்று மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்திய கொடி நாளை முன்னிட்டு கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி துரை ரவிச்சந்திரன் நிதிவசூல் செய்யும் பணியைத் தொடங்கி வைத்தார்.

அதற்கான உண்டியலில்நிதி வழங்கிவிட்டு அவர் கூறியது: "இந்திய நாட்டின் முப்படை வீரர்களின் மகத்தான சேவையினை நினைவு கூரும் வகையில் நாடு முழுவதும் டிசம்பர்  7-ஆம் நாள் கொடி நாளாக ஆண்டுதோறும் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது.

கோயம்புத்தூர் மாவட்டம் படைவீரர் கொடிநாள் நிதி வசூலில் ஒவ்வொரு ஆண்டும் இலக்கினை தாண்டி நிதிவசூல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

நாட்டுக்குச் சேவை செய்ய இளம் ஆண், பெண்களை இராணுவத்திற்கு அனுப்பி வைக்கும் பழக்கம் தமிழகத்தில் பல ஆண்டுகளாக உள்ள மரபாகும்.

நமது இளைஞர்கள் மத்தியில் வீரத்தை விதைத்து, இராணுவத்தில் சேரும் இளைஞர்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க வேண்டும்.

நாட்டைப் பாதுகாக்கச் செல்லும் வீரர்களின் குடும்பத்துக்குப் பாதுகாப்பு அளிப்பதும், போரில் மரணமடைந்த வீரர்களின் வாரிசுகள், குடும்பத்தினருக்கு உதவி செய்வதற்கும், படைப்பணியிலிருந்து விடுவிக்கப்படும் இராணுவ வீரருக்கு மறுவேலைவாய்ப்பு அளிப்பதற்கும் நம் அனைவரின் பங்களிப்பு மிகவும் அவசியம்.

முன்னாள் படைவீரர்கள் ஊனமுற்ற படைவீரர்கள், போர் விதவைகள் மற்றும் குடு்ம்பத்தினருக்கு கோயம்புத்தூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நலத்துறை மூலம் வழங்கப்படும் நலத் திட்டங்களுக்காக, கொடி நாளில் திரட்டப்படும் நன்கொடைகள் முழுவதுமாகப் பயன்படுத்தப்படுகின்றன.

ஒவ்வொரு ஆண்டும் கொடி நாள் வசூல் இலக்கைத் தாண்டி கோயம்புத்தூர் மக்கள் நன்கொடை அளித்து வருகின்றனர்.

கடந்த ஆண்டு ரூ.82 இலட்சத்து 51 ஆயிரம் கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு இலக்காக நிர்ணயிக்கப்பட்டது, ஆனால் நடப்பு (2017) ஆண்டிற்கான கொடிநாள் நிதியாக ரூ. 1 கோடியே 5 இலட்சம் நிதி வசூல் செய்யப்பட்டது. இது கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கினை விட 27.1 சதவீதம் அதிகமாகும்.

ஒவ்வொரு ஆண்டும் படைவீரர் கொடி நாள் நிதிக்கு இலக்கினை விட கூடுதலாக வாரி வழங்கும் கோயம்புத்தூர் மக்களிடம் 2018-ஆம் ஆண்டிற்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கான ரூ.90 இலட்சத்து 76 ஆயிரத்து 200-ஐ விட கூடுதலாக வழங்கிட கேட்டுக் கொள்கிறேன்" என்று அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியின்போது ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ராஜ்குமார் (தேர்தல்) மற்றும் பலர் உடனிருந்தனர்.

click me!