2027 வரை நீட்டிக்கப்பட்ட முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டம்… அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு!!

By Narendran SFirst Published Nov 26, 2021, 5:11 PM IST
Highlights

தமிழகத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் 2022 ஜனவரி மாதத்துடன் கால அளவு முடிவடையும் நிலையில் மேலும் அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

தமிழகத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் 2022 ஜனவரி மாதத்துடன் கால அளவு முடிவடையும் நிலையில் மேலும் அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் ஏழை, எளிய மக்கள் தனியார் மருத்துவமனைகளில் உயர் மருத்துவ சிகிசைக்கிளை கட்டணமில்லாமல் பெறும் நோக்கில் தமிழக அரசால் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் கொண்டு வரப்பட்டது. மருத்துவ காப்பீடு நிறுவனங்கள் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் ஒரு குடும்பத்தில் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சிகிச்சை பெறலாம். அரசின் இந்த திட்டம் மூலம் ஏராளமான மக்கள் பயன்பெற்று வருகின்றனர். மேலும் இதில் அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை சிகிச்சை பெறலாம். கடந்த2020 ஆண்டு ஜூன் மாதம் முதல் கொரோனா சிகிச்சையும் இந்தத் திட்டத்தில் சேர்க்கப்பட்டு தனியார் மருத்துவமனைகளுக்கு கட்டணங்களும் வெளியிடப்பட்டன. அதனால் கடந்த மே மாதம் முதல் புதிய மருத்துவ காப்பீடு அட்டை பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்த காப்பீடு அட்டை வைத்திருப்பவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட காப்பீடு திட்டத்தில் இணைந்துள்ள தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சையை பெறலாம். சிகிச்சைக்கான முழு செலவையும் அரசே ஏற்கும். குடும்ப அட்டை, வருமான வரி சான்று, ஆதார் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை வைத்து காப்பீடு அடையாள அதை வழங்கும் மையம் மூலம் காப்பீடு திட்டத்தில் இணைந்து முதல்வரின் மருத்துவ காப்பீடு அட்டையை பெறலாம். இந்தத் திட்டத்தின் கீழ் காப்பீட்டுத் தவணைத் தொகையை,  ஆண்டொன்றுக்கு குறிப்பிட்ட தொகையை தமிழக அரசே தனியார் காப்பீட்டு நிறுவனத்திற்கு வழங்கி வந்தது. 2011 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இந்த திட்டம் மேம்படுத்தப்பட்டு முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

பின்னர் 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மத்திய அரசின் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டத்துடன் இணைக்கப்பட்டு மத்திய, மாநில அரசுகள் இணைந்து தவணை தொகையை பங்கிட்டு வழங்கி வருகின்றன. இந்த நிலையில் முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. முதல்வரின் காப்பீடு திட்டத்திற்கான காலம் 2022 ஜனவரி 11 ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில் தற்போது மேலும் 5 ஆண்டுகளுக்கு 2027 வரை நீட்டித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் காப்பீடு நிறுவனத்தை தேர்வு செய்ய மக்கள் நல்வாழ்வு மற்றும் நிதித்துறை அலுவலர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டு முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்திற்கு ரூ.1,248.29 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று அரசு தெரிவித்துள்ளது.

click me!