
தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் தேர்தல் பிரசாரம், கூட்டணியை பலப்படுத்துதல், தொகுதி வாரியாக மக்களின் பிரச்சினைகளை ஆராய்தல், தேர்தல் வாக்குறுதி தயாரித்தல் உள்ளிட்டப் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. குறிப்பாக திமுக சார்பில் உங்களுடன் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு மக்களுக்கு தேவையான பல்வேறு அரசு உதவிகள் கிடைக்க வழிவகை செய்யப்பட்டது. பல்வேறு பகுதிகளில் இந்த முகாம் மக்களுக்கு திருவிழா போன்ற ஒரு காட்சியை வழங்கியது.
அதன் தொடர்ச்சியாக திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஒன் டூ ஒன் என்ற நிகழ்ச்சியை மேற்கொண்டு வருகிறார். இதில் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட தலைவர்களை நேரடியாக நேர்காணல் செய்த முதல்வர் ஸ்டாலின் தொகுதியில் இவர்களின் செயல்பாடு, வெற்றிக்கான வாய்ப்பு உள்ளிட்டவைத் தொடர்பாக தீவிரமாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த வரிசையில் இளம் வாக்காளர்களைக் கவரும் வகையில் புதிய நிகழ்ச்சிக்கு திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டள்ளது. அதன்படி தமிழகத்தில் இருந்து தேசிய, சர்வதேச அளவில் விளையாட்டுத் துறையில் ஜொலித்த சாம்பியன்களுடன் கலந்துரையாடுவது போன்று நிகழ்ச்சிக்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் இளம் விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டு முதல்வரிடம் தங்களிடம் இருக்கும் சந்தேகங்களை கேள்விகளாகக் கேட்கலாம்.
தமிழகத்தின் விளையாட்டுத்துறை அமைச்சராக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இருப்பதால் இதுவரை இல்லாத அளவிற்கு விளையாட்டுத் துறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு பல்வேறு போட்டிகளில் தமிழகம் ஜொலிக்கவும் செய்துள்ளது. இதனை தேர்தலில் பயன்படுத்திக் கொள்ளும் விதமாகவே இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
மேலும் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்திற்கே தமிழகத்தில் உள்ள 80 சதவீதத்திற்கும் அதிகமான இளைஞர்களின் செல்வாக்கு இருப்பதாக சொல்லப்படும் நிலையில், அதனை திமுக பக்கம் திருப்பும் முனைப்பில் இந்த நிகழ்ச்சி முன்னெடுக்கப்படுவதாக அரசியல் விமர்சகர்கள் தகவல்களைப் பகிர்கின்றனர்.