
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருவண்ணாமலை மாவட்டம், மலப்பாம்பாடி, கலைஞர் திடலில் நடைபெற்ற அரசு விழாவில், முடிவுற்றப் பணிகளைத் திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இதனைத் தொடர்ந்து பேசிய அவர், “ஆர்வத்துடன் திரண்டிருக்கின்ற உங்களையெல்லாம் பார்க்கும்போது, எனக்குள்ளே ஒரு புது எனர்ஜி பிறக்கின்றது. திருவண்ணாமலை என்று சொன்னதும், ஜவ்வாதுமலை போன்ற எழில் கொஞ்சும் மலைகளின் அழகை ரசிக்கிறதா! இல்லை, உங்கள் முகத்தில் தெரிகின்ற மகிழ்ச்சியை ரசிக்கிறதா! என்று தெரியாமல் உங்கள் முன்பு நின்று கொண்டிருக்கிறேன்.
ஆன்மீகத்தில் ஒளி வீசி, தமிழ்நாட்டிலேயே மிக உயர்ந்த 217 அடி ராய கோபுரம் கொண்டு, ஆன்மீக அன்பர்களையும் ஈர்க்கின்ற இடம், இந்த திருவண்ணாமலை! கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் - பாறை ஓவியங்கள் - கருவிகள், தொல்லியல் அகழாய்வில் முத்திரை பதிக்கும் கீழ் நமண்டி என்று நம்முடைய வரலாற்றுச் சுவடும் நிறைந்து இருக்கின்ற இந்த மாவட்டத்திற்கு ஆரணி அரிசி, ஆரணி பட்டு, படவேடு வாழை, மொடையூர் சிற்பங்கள் என்று ஏராளமான பெருமைகள் இருக்கின்றது!
அதுமட்டுமல்ல, திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு, முதல் நாடாளுமன்ற உறுப்பினரை அளித்த வரலாற்றுப் பெருமையும் இந்த மண்ணிற்கு உண்டு! இந்தப் பெருமைகளுக்கு புகழ் சேர்த்து, புது வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கு தான், நம்முடைய திராவிட மாடல் அரசு பணியாற்றிக் கொண்டிருக்கிறது!
நம்முடைய திராவிட மாடல் அரசு அமைந்து நான்கரை ஆண்டுகள் ஆகிறது… இந்த நான்கரை ஆண்டுகளில், நாடே போற்றும் ஏராளமான திட்டங்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம்! நம்முடைய ஆட்சியின் ஒவ்வொரு திட்டமும், தமிழ்நாட்டில், ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று சேரவேண்டும் என்று கவனமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்!
நாம் கொண்டுவந்த விடியல் பயணம் திட்டத்தின் மூலமாக, சுமார் 900 கோடி முறை, மகளிர் கட்டணமில்லாமல் பயணம் செய்திருக்கிறார்கள்.
அதேபோல, ஒவ்வொரு மாதமும், ஒரு கோடியே 30 இலட்சம் பெண்களுக்கு எங்கள் அண்ணன் ஸ்டாலின் வழங்குகின்ற சீர் என்று, நீங்கள் சேர்த்து வைக்கின்ற ஆயிரம் ரூபாயை வழங்குகின்ற, கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம்.
மாநில உரிமையை நாம் விட்டுக்கொடுக்காமல் இருப்பதைப் பற்றியும் நிறைய பேர் பாராட்டி எழுதி இருக்கிறார்கள். ஏன், “தொகுதி மறுசீரமைப்பு வந்தால், தமிழ்நாட்டின் ஜனநாயக வலிமை குறையும் - தி.மு.க. அரசு தான் இந்தியா முழுவதும் தலைவர்களை ஒன்றுதிரட்டி போராடுகிறார்கள் என்று எழுதியிருக்கிறார்கள்.
தொலைக்காட்சியில் பார்த்திருப்பீர்கள். இத்தனை நாள் மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல், வெளியே சொல்லவும் முடியாமல் இருந்த பா.ஜ.க.காரங்களே இப்போது இதையெல்லாம் பார்த்து புலம்பத் தொடங்கிவிட்டார்கள். திராவிட மாடல் அரசு மீதும் சில பேர் விமர்சனம் வைப்பார்கள். அந்த விமர்சனத்தில் நியாயம் இருக்கிறதா? என்று பார்த்து, சரி செய்கின்ற முதலமைச்சர்தான் உங்கள் நம்பிக்கைக்குரிய இந்த ஸ்டாலின். ஆனால், ஒன்றிய பாஜக அரசு எந்தக் கோரிக்கையையும் கண்டு கொள்வதில்லை. எந்த விமர்சனத்தையும் நியாயத்துடன் பார்ப்பது இல்லை. கழக அரசின் நலத்திட்டங்களால், பயனடையாத ஒரு குடும்பம் கூட தமிழ்நாட்டில் இல்லை என்ற அளவுக்கு செயல்படும், இந்த திராவிட மாடல் நல்லாட்சி தொடர, திருவண்ணாமலை மக்கள் எப்போதும் போல வரும் தேர்தலிலும், முழுமையான ஆதரவை எங்களுக்கு வழங்கவேண்டும்!
தமிழ்நாடு நம்பர் ஒன்றாக தொடர நீங்கள் உதவ வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.