
தமிழக வெற்றி கழகத்தின் திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கட்சியின் நிர்வாகக் குழு தலைவர் செங்கோட்டையன் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அவர், “அரசியல் கட்சிகளுக்கு கூட்டம் வரும், ஆனால் அதில் வேகம் இருக்காது. ஆனால் இங்கு கூடியிருக்கும் இந்த கூட்டம் விஜய் முதல்வராக வேண்டும் என்ற ஆர்ப்பரிப்போடு கூடியிருக்கிறது.
இந்தக் கூட்டத்தை எந்த சக்தியாலும் கட்டுப்படுத்த முடியாது. இங்கு கூடியுள்ள கூட்டத்தைப் பார்த்து ஆளும் கட்சியினரும், எதிர்க்கட்சியினரும் தேர்தலில் நிற்கலாமா? வேண்டாமா? என்ற அச்சத்தில் உள்ளனர். அவர்கள் வருகின்ற பிப்ரவரி மாதத்திற்கு பின் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஆட்களைத் தேடும் நிலை உருவாகும். வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் தவெக 234 தொகுதிகளிலும் வெற்றிபெறும்.
ஒவ்வொரு வருடத்திற்கும் ரூ.1000 சம்பாதித்துவந்தவர் தற்போது பணம் தேவையில்லை, மக்களின் நலன் தான் முக்கியம் என்று வந்துள்ளார். மே மாதத்திற்கு பின்னர் தமிழகம் இந்தியாவுற்கே வழிகாட்டியாக இருக்கும்.பணம் கொடுக்காமல் சேர்ந்த கூட்டம் இது. இங்கு நீதி, நியாயம் உள்ளது. தமிழகத்தில் வருகின்ற ஜனவரி 15ம் தேதிக்கு பின்னர் அதிகமான மாற்றங்கள் நிகழும். எந்த நேரத்தில் தேர்தல் நடந்தாலும் தமிழகத்தின் நிரந்தர முதல்வராக விஜய் இருப்பார்.
வழிதெரியாமல் நின்ற பொழுது நமக்கு வழிகாட்டியவர் அவர் தான். எனது உடலில் ஓடக்கூடிய ஒவ்வொரு சொட்டு ரத்தமும் விஜய்க்கு தான். கேட்காமலே நமக்கு கொடுக்கக்கூடிய தலைவர் கிடைத்துள்ளார். அவர் தான் நமது வெற்றி தளபதி. ஜெயலலிதாவுடன் பயணித்தபோது ஒருவரை அடையாளம் காட்டினேன். ஆனால் அவர் இன்று என்னை அடையாளம் காட்டிவிட்டு சென்றுவிட்டார். இதனால் நான் மகிழ்ச்சி அடைந்துள்ளேன். அவருடன் பயணித்தால் நான் பின்னோக்கி சென்றிருப்பேன். ஆனால் தவெகவுடன் பயணிப்பதால் முன்னோக்கி சென்றுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.