பதக்கங்கள் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு உதவித்தொகை… காசோலைகளை வழங்கினார் மு.க.ஸ்டாலின்!!

By Narendran SFirst Published Nov 24, 2022, 7:02 PM IST
Highlights

தேசிய மற்றும் பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற 190 வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூபாய் 4.85 கோடி ஊக்கத்தொகை வழங்கினார்.

தேசிய  மற்றும் பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற 190 வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூபாய் 4.85 கோடி ஊக்கத்தொகை வழங்கினார். விளையாட்டு துறையில் இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கிடவும், அகில இந்திய அளவிலும் பன்னாட்டு அளவிலும் நடைபெறும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கு கொண்டு வெற்றி பெறும் வகையில் அவர்களுக்கு உரிய பயிற்சி அளித்தல், உயரிய ஊக்கத்தொகை வழங்குதல், விளையாட்டிற்கான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல் என பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது.

அந்த வகையில் சென்னை, கலைவாணர் அரங்கத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் சார்பில் விழா நடத்தப்பட்டது. அதில் தேசிய மற்றும் பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற 190 வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு 4 கோடியே 85 இலட்சம் ரூபாய் உயரிய ஊக்கத்தொகைக்கான காசோலைகள் வழங்கப்பட்டது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துக்கொண்டு காசோலைகளை வழங்கினார். 

இதையும் படிங்க: அரை வேக்காடுத்தனமாக அவசரக்கோலத்தில் கருத்து சொல்லும் ஆளுநர் ரவி..! கே.எஸ். அழகிரி ஆவேசம்

பதக்கம் வென்ற வீரர்களும், வழங்கப்பட்ட காசோலையும்:

இவ்வாண்டு கொலம்பியாவில் நடைபெற்ற 20 வயதிற்குட்பட்டோருக்கான  உலக தடகள வாகையர் போட்டியில்,  டிரிப்பிள் ஜம்ப் பிரிவில் (Triple Jump) வெள்ளிப்பதக்கம் வென்ற டி.செல்வபிரபு, 4 x 400 மீட்டர் கலப்பு தொடர் ஒட்டப் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்ற பரத் ஸ்ரீதர் ஆகியோருக்கு தலா 4 இலட்சம் ரூபாய் வீதம் மொத்தம் 8 இலட்சம் ரூபாய்க்கான காசோலைகள் வழங்கப்பட்டன. 

இந்தோனேசியா நாட்டின் ஜகார்தாவில்  நடைபெற்ற ஆசிய கோப்பை வளைகோல்பந்து  வாகையர் போட்டியில் (ASIA CUP HOCKEY CHAMPIONSHIP-2022) இந்திய அணியில் பங்கேற்று வெண்கலப் பதக்கம் வென்ற தமிழ்நாட்டை சேர்ந்த வீரர்கள் எஸ். மாரீஸ்வரன் மற்றும் எஸ். கார்த்தி ஆகியோருக்கு தலா 10 இலட்சம் ரூபாய் வீதம், மொத்தம் 20 இலட்சம் ரூபாய்க்கான காசோலைகள் வழங்கப்பட்டன.  

இதையும் படிங்க: காங்கிரஸ் கட்சியில் இருந்து ரூபி மனோகரன் தற்காலிக நீக்கம்..! ஒழுங்கு நடவடிக்கை குழு அதிரடி அறிவிப்பு

2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஐக்கிய அரபு நாட்டின் சார்ஜாவில்  நடைபெற்ற உயரம் குறைந்த மாற்றுத்திறனாளிகளுக்கான உலக அளவிலான விளையாட்டுப் போட்டியில் 100 மீட்டர், 200 மீட்டர் தடகளப் போட்டிகளில் 2 தங்கப்பதக்கங்கள் வென்ற ஆர். பாலசுப்பிரமணியன் அவர்களுக்கு 10 இலட்சம் ரூபாய்க்கான காசோலை, ஈட்டி எறிதல்  போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற ஏ. செல்வராஜுக்கு 5 இலட்சம் ரூபாய்க்கான காசோலை, குண்டு எறிதல் மற்றும் வட்டு எறிதல்  போட்டியில் 2 வெண்கலப் பதக்கங்கள் வென்ற ஜி. விஜயசாரதிக்கு 4 இலட்சம் ரூபாய்க்கான காசோலை, ஈட்டி எறிதல் மற்றும் வட்டு எறிதல்  போட்டியில் 2 வெண்கலப் பதக்கங்கள் வென்ற கே. கணேசனுக்கு 4 இலட்சம் ரூபாய்க்கான காசோலை, குண்டு எறிதல்  போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற எஸ். மனோஜுக்கு 2 இலட்சம் ரூபாய்க்கான காசோலை, இறகுப்பந்து ஒற்றையர் பிரிவு போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற எஸ். சிவராஜனுக்கு 3 இலட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டன. 

குஜராத்தில் 29.9.2022 முதல் 12.10.2022 வரை நடைபெற்ற 36 ஆவது தேசிய விளையாட்டுப் போட்டியில் (36th NATONAL GAMES 2022)  வெற்றி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 68 விளையாட்டு வீரர்கள் மற்றும் 112 விளையாட்டு வீராங்கனைகள், என 180 வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத்தொகையாக 4 கோடியே 29 இலட்சம் ரூபாய்க்கான காசோலைகள் வழங்கப்பட்டன. திமுக அரசு பொறுப்பேற்ற நாளிலிருந்து இன்றுவரை 1433 விளையாட்டு வீரர்களுக்கு ரூ.40.90 கோடி ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

click me!