பள்ளிக்கு திடீர் விசிட்.. மாணவர்களோடு அமர்ந்து பாடம் கேட்ட முதல்வர்.. நடந்த சுவாரஸ்யமான சம்பவம்..

By Thanalakshmi VFirst Published Jun 13, 2022, 12:28 PM IST
Highlights

கோடை விடுமுறைக்கு பிறகு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், அரசுப்‌ பள்ளிக்கு திடீர் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர்‌ மு.க. ஸ்டாலின்‌, 10ஆம்‌ வகுப்பு மாணவர்களுடன்‌ இருக்கையில்‌ அமர்ந்து தமிழ்‌ ஆசிரியை நடத்தும்‌ பாடத்தை கவனித்தார்‌. மேலும் மாணவர்கள் படிப்பு, படிப்பு, படிப்பு என்று தான் இருக்க வேண்டும் என்று ஒரு தந்தையாக இருந்து அறிவுறுத்துவதாக பேசினார்.
 

கோடை விடுமுறைக்கு பிறகு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், அரசுப்‌ பள்ளிக்கு திடீர் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர்‌ மு.க. ஸ்டாலின்‌, 10ஆம்‌ வகுப்பு மாணவர்களுடன்‌ இருக்கையில்‌ அமர்ந்து தமிழ்‌ ஆசிரியை நடத்தும்‌ பாடத்தை கவனித்தார்‌. மேலும் மாணவர்கள் படிப்பு, படிப்பு, படிப்பு என்று தான் இருக்க வேண்டும் என்று ஒரு தந்தையாக இருந்து அறிவுறுத்துவதாக பேசினார்.

தமிழகம்‌ முழுவதும்‌ கோடை விடுமுறை முடிவடைந்து, 1 முதல்‌ 10ஆம்‌ வகுப்பு மாணவர்களுக்கு இன்று பள்ளிகள்‌ திறக்கப்பட்டுள்ளன.இந்த நிலையில்‌, அரசுப்‌ பள்ளிகளில்‌ மேற்கொள்ளப்பட்டிருக்கும்‌ உள் கட்டமைப்பு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்யும் வகையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பள்ளிக்‌ கல்வித்‌ துறை அமைச்சர்‌ அன்பில்‌ மகேஷ்‌ ஆகியோர்‌ இன்று காலை பள்ளிக்கு நேரில்‌ சென்று ஆய்வு செய்தனர். அந்த வகையில்‌, திருவள்ளூர்‌ மாவட்டம்‌ வடகரையில்‌ உள்ள அரசுப்‌ பள்ளிக்குச்‌ சென்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்‌, 10ஆம்‌ வகுப்பு மாணவர்களுடன்‌ ஒரே இருக்கையில்‌ அமர்ந்து தமிழ்‌ ஆசிரியை நடத்தும்‌ பாடத்தை கவனித்தார்‌. மாணவர்களோடு மாணவனாய் இருக்கையில் அமர்ந்து தமிழ்‌ ஆசிரியை பாடம்‌ நடத்தும்‌ முறையை, முதலமைச்சர், அமைச்சர்‌ அன்பில்‌ மகேஸ்‌ உள்ளிட்டோர் கவனித்தனர். 

பின்னர், புழல் அருகே அழிஞ்சிவாக்கம் பகுதியில் 'எண்ணும் எழுத்தும்' திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் பின்னர் பேசிய அவர்,” 1 முதல் 3ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கற்றல் இடைவெளியை குறைக்கும் வகையில் 'எண்ணும் எழுத்தும்' திட்டம் தொடக்கப்பட்டுள்ளது.  மேலும் கற்றல் இடைவெளியை குறைக்கவும், கற்றல் ஆற்றலை அதிகப்படுத்தவும் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. 

இதன் மூலம் மாணவர்களுக்கு படைப்பாற்றல், அறிவாற்றல், தன்னம்பிக்கை அதிகமாகும். மேலும் இந்த திட்டத்தை செயல்படுத்த செயலியும் உருவாக்கப்பட்டுள்ளது.  ஆடல், பாடல், நடித்துக்காட்டுதல், பொம்மலாட்டம் என்று பல்வேறு வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இதற்காக கல்வித்துறை அதிகாரிகள், கல்வியாளர்கள் கொண்ட உயர்மட்ட குழு உருவாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாணவர்களும் 8 வயதிற்குள் பொருள் புரிந்து படிக்கும் திறனையும் அடிப்படை கணித செயல்பாடுகளைச் செய்யும் திறன்களையும் பெற்றிருக்க வேண்டும் என்பதே இந்த திட்டத்தின் இலக்காகும். 

மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் 1,2,3 ஆம் வகுப்புகளுக்கு 2022- 23 ஆம் ஆண்டில் இருந்து எண்ணும் எழுத்தும் திட்டம் நடைமுறைப்படுத்தவுள்ளது.ஒரு முதலமைச்சராக இல்லாமால் தந்தையாக கேட்கிறேன் மாணவர்கள் அனைவரும் படிப்பு, படிப்பு, படிப்பு என்று இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

click me!