இளவரசருக்காக பொதுக்குழு! அதிமுக- பாஜக கூட்டணியால் தூக்கத்தை தொலைத்த முதல்வர்! எல்.முருகன்!

Published : Jun 02, 2025, 02:56 PM IST
l murugan

சுருக்கம்

திமுக பொதுக்குழுக் கூட்டம் மு.க.ஸ்டாலினின் மகனுக்காக நடத்தப்பட்டது. திமுக ஆட்சியில் இமாலய ஊழல் நடப்பதாகவும், மக்கள் துயரத்தில் இருப்பதாகவும் எல்.முருகன் குற்றம் சாட்டியுள்ளார்.

மன்னராட்சி நடத்தி வரும் மு.க.ஸ்டாலின்

அதிமுக- பாஜக கூட்டணியால் தூக்கத்தை தொலைத்து தவிக்கிறார்கள் என்பது தெளிவாகிறது என எல்.முருகன் கூறியுள்ளார். இதுதொடர்பாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்: குடும்ப அரசியல் நடத்தி வரும் திமுகவினருக்கு, தனது மகனே எதிர்கால கட்சி என்பதை மீண்டும் ஒருமுறை உணர்த்திட மதுரையில் திமுக பொதுக்குழுக் கூட்டத்தை நடத்தி முடித்திருக்கிறார் அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின். மாவட்டம் தோறும் வாரிசு அரசியலை வளர்த்து, குட்டி ஜமீன்தாரர்களாக வலம் வரும் திமுகவின் இரண்டாம் கட்டத் தலைவர்களுக்கும் இது மகிழ்ச்சி தான். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தொடங்கிய குடும்ப அரசியலை ஏற்றுக்கொண்ட திமுக-வினருக்கு, தற்போது மு.க.ஸ்டாலின் செய்து வரும் குடும்ப அரசியலைய ஏற்றுக் கொள்வதிலும், இளவரசருக்கு துதி பாடுவதிலும் எந்த வெட்கமோ, வேதனையோ இருக்கப் போவதில்லை.

குடும்பத்தின் கட்டுப்பாட்டில் அரசியல், அரசு என மன்னராட்சி நடத்தி வரும் மு.க.ஸ்டாலின் மகிழ்ச்சியில் திளைக்கிறார். ஆனால், கடந்த 50 ஆண்டுகளாக இந்த கொடூர குடும்ப ஊழல் ஆட்சியில் சிக்கித் தவிக்கும் தமிழக மக்கள் தான் செய்வதறியாது தவிக்கின்றனர். இமாலய ஊழல் செய்து, பணம் குவித்து, அதனை வைத்து அரசியல் செய்து ஆட்சியைப் பிடித்து, மீண்டும் கணக்கு வழக்கில்லாமல் ஊழல் செய்து பணம் குவித்து உலகப் பணக்காரர்களாக தனது குடும்பத்தினரை வலம் வரச் செய்த விஞ்ஞான ஊழலுக்கு சொந்தக்காரர் மறைந்த முதல்வர் கருணாநிதி அவர்கள்.

மகனுக்காக நடத்தப்பட்ட இந்த பொதுக்குழு

இந்த தொட்டுத் தொடரும் கருணாநிதியின் விஞ்ஞான ஊழல் பாரம்பரியம், தற்போதைய திமுக ஆட்சியில் அஞ்சாத ஊழலமாக உருமாறிப் போயுள்ளது. தனது மகனுக்காக நடத்தப்பட்ட இந்த பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தான் வேடிக்கையாக இருக்கின்றன. பாஜகவையும், மத்திய அரசையும் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றி விட்டால் தனது ஆட்சியில் நடக்கும் அவலங்களையும், ஊழல்களையும் மக்கள் மறந்து விடுவார்கள் என்று மனக்கணக்குப் போடுகிறார் மு.க.ஸ்டாலின். தனது மகன் தான் இளவரசர், அவர் தான் கட்சியின் எதிர்காலம், அவர் இடும் கட்டளைகளை ஏற்று திமுகவினர் நடக்க வேண்டும் என்று சொல்லாமல் சொல்லும் தீர்மானம்.

இந்த கொடூரத்திற்கு பெயர் தான் திராவிட மாடலா?

ஏன் இந்தப் பொதுக்குழு என்பதற்கு அவர்கள் நிறைவேற்றிய தீர்மானமே சான்று. முன்னாள் முதல்வர் கருணாநிதின் பிறந்த நாளை செம்மொழி நாளாக அறிவிக்க கோரி தீர்மானம். ஏன், அதற்கு முன்பு தமிழ் செம்மொழியாக இருக்கவில்லையா? வான்புகழ் வள்ளுவன் தொடங்கி, தமிழின் அடையாளமாக விளங்கிய பலரும் இருக்கிறார்களே! தமிழ்- தமிழ்நாடு என்றாலே, திமுகவினருக்கு கருணாநிதி என்று அர்த்தம் போலும். தமிழகத்தை கருணாநிதி நாடு என அறிவித்து விடுங்களேன். இந்த போலி திராவிட மாடல் ஆட்சியில் உழவர்கள், நெசவாளர்கள், மீனவர்கள் என ஒவ்வொரு தரப்பு மக்களும் படும் துயரங்கள் ஏராளம். இந்த 4 ஆண்டுகால திமுக ஆட்சியில், பட்டியலின மக்கள் அனுபவித்து வரும் கொடுமைகள் எண்ணற்றவை. இந்த கொடூரத்திற்கு பெயர் தான் திராவிட மாடலா?

நகைக்கடனுக்கு ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் என்ற மக்கள் கோரிக்கையை ஏற்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் ஏற்கனவே நடவடிக்கை எடுத்து விட்டார். பிறகு எதற்கு இந்த தீர்மானம்? தமிழகத்திற்கு மத்திய அரசு நிதி தரவில்லை என்று ஒரு தீர்மானம். எந்த நிதி தரவில்லை என்று கூறுங்கள் என மத்திய நிதியமைச்சர் பலமுறை கேள்வி கேட்டுவிட்டார். பிரதமர் நரேந்திர மோடி ஜி அவர்கள் தலைமையிலான மத்திய அரசு, தமிழகத்திற்கு 11 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக நிதி வழங்கியுள்ளது. ஆனால், திமுக அங்கம் வகித்த மத்திய அரசு, தமிழகத்திற்கு செய்தது என்ன? திமுகவிற்கு அதைச் சொல்ல திராணி இருக்கிறதா?

பூச்சாண்டி அரசியல் செய்வது திமுகவினரின் வாடிக்கை

இந்தி திணிப்பை கைவிட வேண்டும், கீழடி ஆய்வை மத்திய அரசு வெளியிட மறுக்கிறது என்று வழக்கமான பல்லவியைப் பாடி தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறார்கள். இல்லாத ஒன்றை வைத்து பூச்சாண்டி அரசியல் செய்வது திமுகவினரின் வாடிக்கை. மத்திய அரசு மீது குற்றம் சுமத்த ஏதும் இல்லை என்பதால் இவர்களிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்? தமிழ்நாட்டில் நடந்து வரும் ரயில்வே திட்டங்களை பற்றி நான் பலமுறை பட்டியலிட்டு விட்டேன். ஆனால் கோயபல்ஸ் போல, சொல்கிற பொய்யை மீண்டும் மீண்டும் சொல்வதே திமுகவினரின் வாடிக்கையாகி விட்டது. வக்பு சட்டம் சிறுபான்மையினரின் உரிமைகளை பறிப்பதாக திமுக கூட்டணிக் கட்சிகள் தான் விஷம்ப் பிரசாரம் செய்கின்றன. ஆனால், பல லட்சக்கணக்கான இஸ்லாமிய மக்களே இந்தச் சட்டத்தை வரவேற்கின்றனர். குறிப்பிட்ட சிலரின் கட்டுப்பாட்டில் இருக்கும் வக்பு சொத்துக்களை, அனைத்து இஸ்லாமிய மக்களும் பயனடையும் வகையில் சட்டம் கொண்டு வந்ததற்காக பிரதமர் நரேந்திர மோடி ஜி அவர்களை இஸ்லாமிய சமுதாயம் பாராட்டுகிறது. வருமான வரித்துறை, அமலாக்கத்துறை விசாரணைகளால் அரண்டு போயுள்ள திமுகவினர் தொடர்ந்து பிதற்றுகின்றனர். இதற்காக ஒரு தீர்மானம்.

தொடை நடுங்கி திமுக

ஊழல் செய்து பணம் குவித்தால் அதற்குரிய தண்டனையை பெற்றுத் தான் ஆக வேண்டும். மடியில் கனம் இல்லை என்றால் பயம் எதற்கு? தமிழக மக்களை சுரண்டி கொள்ளையடித்து, வரலாறு காணாத ஊழல் செய்த திமுகவினர் ஒவ்வொருவரும் கண்டிப்பாக சட்டத்தின் முன்பு நிறுத்தப்படுவர். செய்த குற்றங்களுக்காக விசாரணை அமைப்புகளை எதிர்கொண்டு தான் ஆக வேண்டும். நீதிமன்ற விசாரணைகளையும், கேள்விகளையும் சந்தித்து தான் ஆக வேண்டும். உப்பு தின்றால் தண்ணீர் குடித்து தானே ஆக வேண்டும். மீனவர்களின் நலன் காக்க கச்சத்தீவை மீட்கக்கோரி தீர்மானம்.

சொந்த அரசியலுக்காக, ஊழல் வழக்கில் இருந்த தப்பிக்க, "எனது தந்தை கருணாநிதி அவர்கள் தாரை வார்த்த கச்சதீவை மத்திய அரசு மீட்டுத் தர வேண்டும்" என்று .மு.க.ஸ்டாலின் தீர்மானம் நிறைவேற்றி இருந்தால் மிகப் பொருத்தமாக இருந்திருக்கும். சாதிவாரிக் கணக்கெடுப்பை பற்றி பேசுவதற்கு திமுகவிற்கு எந்தத் தகுதியும் கிடையாது. பீகார், தெலங்கானா போன்ற மாநிலங்கள் சாதி வாரி கணக்கெடுப்பை நடத்தும்போது தமிழகம் நடத்தினால் என்ன என்று நான் பலமுறை கேள்வி எழுப்பினேன். அப்போதெல்லாம் அஞ்சி நடுங்கி மழுப்பி வந்த, தொடை நடங்கி திமுகவினர் எங்களால் ஆகாது என்று கைவிரித்து விட்டனர்.

சாதிவாரி கணக்கெடுப்பு

தற்போது மத்திய அரசே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதாக அறிவித்து விட்டது. மத்திய அரசின் முயற்சியால் சாதிவாரி கணக்கெடுப்பு நடந்து பழங்குடி, பட்டியலின, பிற்படுத்தப்பட்ட மக்கள் தங்களது விகிதாச்சாரங்களுக்கு ஏற்ப இடஒதுக்கீடு உள்ளிட்ட சலுகையைப் பெறவுள்ளனர். சாதிவாரி கணக்கெடுப்பு என்பது மத்திய பாஜக அரசின் சமூக நீதி சிந்தனை திட்டம். இதுபற்றி பேசுவதற்கு கூட திமுகவினருக்கு தகுதியில்லை. தமிழகத்தின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் குறைக்கப்படாது என்பதை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்கள் தமிழகம் வந்தபோதே தெளிவுபடுத்தினார். இருந்தும் இந்த விஷமப் பிரசாரத்தை திமுக செய்வது ஏன்? இல்லாத ஒன்றை பெரிதாக்குவதில் திமுகவினர் வல்லவர்களாயிற்றே.

வெட்கமாக இல்லையா?

ஆளுநரின் அதிகார வரம்பு உள்ளிட்ட விவகாரங்கள் எல்லாம் உச்ச நீதிமன்றத்தின் விசாரணையில் இருக்கிறது. இந்த விஷயத்தில் அரசியல் சட்டப்படி நீதிமன்றம் தீர்ப்பளிக்கட்டும். அதற்குள் என்ன அவசரம்? குற்றம் உள்ள நெஞ்சு குறுகுறுக்கத் தானே செய்யும்? கட்சி தொடங்கிய காலம் முதல் மாநில சுயாட்சிக்காக தீர்மானம் நிறைவேற்றும் திமுகவினர், தாங்கள் மத்தியில் ஆட்சியில் இருந்தபோது இதற்காக ஒரு துரும்பையாவது தூக்கி போட்டு இருப்பார்களா? கல்வியை மாநில பட்டியலில் இருந்து பறித்தது யார்? அந்த காங்கிரஸ் கட்சியுடன் தான் கொஞ்சி குளாவிக் கொண்டு இருக்கிறீர்கள். தமிழகத்திற்கு வஞ்சகம் செய்த காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடும் திமுகவினர் இதைப் பற்றி பேசுவதற்கு வெட்கமாக இல்லையா? பொள்ளாச்சி பாலியல் வழக்கு பற்றி தீர்மானம் நிறைவேற்றி இருக்கும் திமுகவினர், அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கை மறந்து போவது ஏன்?

அதிமுக- பாஜக கூட்டணி

"யார் அந்த சார்?" என்று தமிழகத்தில் இன்றும் எதிரொலிக்கும் அந்தக் கேள்வியை காதுகொடுத்து கேட்கும் தைரியம் திமுகவினருக்கு இல்லை என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். அதிமுக- பாஜக கூட்டணி அமைந்ததில் இருந்து திமுக எந்த அளவிற்கு பயந்து போய் இருக்கிறது என்பதற்கு கடைசி தீர்மானமே சாட்சி. படுத்துக் கொண்டே 200 இடங்கள் வெல்வோம் என்று ஜம்பம் பேசி வந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும், திமுகவினரும், அதிமுக- பாஜக கூட்டணியால் தூக்கத்தை தொலைத்து தவிக்கிறார்கள் என்பது தெளிவாகிறது. 200 இடங்கள் என்றவர்கள் தற்போது தொண்டர்கள் களப்பணியாற்றுமாறு கெஞ்சுகின்றனர். ஊர் ஊராக சென்று கட்சி நிர்வாகிகளை, தேர்தல் பணியை செய்ய வைக்க முடியுமா என்று அலைபாய்கின்றனர்.

திமுகவினர் என்ன சர்க்கஸ் செய்தாலும் தமிழக மக்கள் அவர்களை நம்பப் போவதில்லை. இந்தக் கொடூர திமுக ஆட்சியில் தமிழக மக்கள் படும் துயரம் ஒன்றல்ல, இரண்டல்ல.. மக்களை சுரண்டி, கொள்ளையடித்து, திமுக குடும்பம் மட்டுமே குதூகலமாக வாழும் இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவதற்கு தமிழக மக்கள் எப்போதோ தயாராகி விட்டார்கள். அதற்கு முரசறைந்து உலகிற்கு அறிவிக்கும் நாள் தமிழக சட்டமன்ற தேர்தல். 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணி வரலாறு காணாத மகத்தான வெற்றி பெற்று, தமிழக மக்கள் விரும்பும் நல்லாட்சியை வழங்கும். மக்கள் பணத்தை சுருட்டி ஒய்யார வாழ்வு வாழும் திமுகவினர், படுதோல்வியை தழுவி செய்த தவறுகளுக்காக தண்டனை பெற்று சிறைக்கு செல்வதும் நடக்கும். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவைத் தர, 2026 சட்டமன்ற தேர்தலை தமிழக மக்கள் ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள் என்பதே உண்மை என கூறியுள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

விஜய் கொடுத்த அசைன்மெண்ட்..! செங்கோட்டையனின் வருகைக்கு பின் அடியோடு மாறிய தவெக..!
திமுக கூட்டணியில் விஜய் வைத்த வேட்டு..! இருதலைக் கொல்லியான காங்கிரஸ்..! மு.க.ஸ்டாலின் பகீர் முடிவு..!