மீண்டும் வேலையை காட்டும் சூப்பர் முதலமைச்சர்! இந்து மதத்தின் மீது தீராத வெறுப்பு கொண்டவர் ஸ்டாலின்! பாஜக!

Published : Jun 12, 2025, 06:18 AM IST
Vanathi srinivasan

சுருக்கம்

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்படும் ஜாதி சான்றிதழில் 'இந்து' என்ற வார்த்தை நீக்கப்பட்டுள்ளதற்கு வானதி சீனிவாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

Vanathi Srinivasan:எல்லா மதங்களின் பண்டிகைகளுக்கும் வாழ்த்து கூறும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இந்து மத பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்து கூறுவதில்லை. அந்த அளவுக்கு இந்து மதத்தின் மீது தீராத வெறுப்பு கொண்டவர் என வானதி சீனிவாசன் கூறியுள்ளார். இதுதொடர்பாக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்: தமிழகத்தில் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு வழங்கப்படும் ஜாதி சான்றிதழில், இந்து மறவர், இந்து வேளாளர், இந்து நாடார் என ஜாதிக்கு முன் 'இந்து' என்ற வார்த்தை இடம் பெறும். ஆனால் தற்போது ஆன்லைன் வழியாக பெறப்படும் சான்றிதழ்களில், நேரடியாக ஜாதி பெயர், அது பிற்படுத்தப்பட்ட பிரிவா, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவா என மட்டும் குறிப்பிடப்படுகிறது. 'இந்து' என்ற வார்த்தை நீக்கப்பட்டுள்ளது. இந்து விரோத திமுக அரசின் இந்த கொடுஞ்செயல் பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. இது மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளன.

நிச்சயமாக நல்ல நோக்கம் இருக்க முடியாது

இந்து மதத்தில் ஜாதி வேறுபாடுகள் இருக்கின்றன என்பதற்காகவே, இந்து மதத்தில் உள்ள ஜாதிகளுக்கு கல்வி, அரசு வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ்களில், ஜாதி பெயருடன் இந்து என்ற வார்த்தை சேர்க்கப்பட்டால் மட்டுமே அவர்கள் இட ஒதுக்கீட்டை பெறக்கூடியவர்களாக இருப்பார்கள். அப்படியிருக்கும்போது, ஏன் இந்து என்ற பெயரை திமுக அரசு நீக்குகிறது என்பது தெரியவில்லை. திமுக அரசின் இந்த செயலில் நிச்சயமாக நல்ல நோக்கம் இருக்க முடியாது.

சதி வேலை செய்யப்பட்டு இருக்குமோ என்ற சந்தேகம்

ஏனெனில், முஸ்லிம், கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கும் பட்டியல் இனத்தவர் இட ஒதுக்கீடு வேண்டும் என்று கோரிக்கையை திமுக அரசு வலியுறுத்தி வருகிறது. அதுபோல, கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய வன்னியர்களுக்கும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கையை சில அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த சூழலில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான சான்றிதழில், 'இந்து' என்ற பெயர் நீக்கப்பட்டிருப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. முஸ்லிம், கிறிஸ்தவ மதங்களுக்கு மாறிய சில சமூகங்களை சேர்ந்தவர்களுக்கு, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பட்டியலின, பழங்குடியின இட ஒதுக்கீட்டை வழங்கும் தீய உள்நோக்கத்துடன் இந்த சதி வேலை செய்யப்பட்டு இருக்குமோ என்ற சந்தேகம் வலுவாக எழுதுகிறது.

இந்து மதத்தின் மீது தீராத வெறுப்பு

தமிழகத்தில் இருக்கும் திமுக அரசு என்பது, இந்து மதத்தை முற்றிலும் வெறுக்கக்கூடிய இந்து விரோத அரசு. எல்லா மதங்களின் பண்டிகைகளுக்கும் வாழ்த்து கூறும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இந்து மத பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்து கூறுவதில்லை. அந்த அளவுக்கு இந்து மதத்தின் மீது தீராத வெறுப்பு கொண்டவர். எனவே, அவருடைய ஆட்சியில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ்களில் இந்து பெயர் நீக்கப்பட்டுள்ளது தீவிர இந்து வெறுப்பாகவும், இந்து மத அழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாகவுமே பார்க்க வேண்டியுள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழில், இந்து பெயரை நீக்கிவிட்டால், இன்னும் 10 ஆண்டுகளில் அவர்கள், இந்துவே இல்லை என்று சொல்லிவிடலாம் என்று திமுக அரசு கணக்கு போடுகிறது என்று நினைக்கிறேன்.

திமுக அரசு கைவிட வேண்டும்

திமுக அரசுக்கும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கும் இது போன்ற ஆலோசனைகளை சொல்லக்கூடியவர், முதலமைச்சரையும் மீறி தமிழக அரசை வழிநடத்திக் கொண்டிருக்கும் 'சூப்பர் முதலமைச்சர்'தான் என்பது அனைவருக்கும் தெரியும். அந்த 'சூப்பர் முதலமைச்சரின்' ஆலோசனை அடிப்படையில் தான் இந்துமத அழிப்பு நடவடிக்கைகளை திமுக அரசு தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. ஏற்கனவே, 'பி.எம். ஶ்ரீ' திட்டத்தை செயல்படுத்த தயாராக இருப்பதாக ஒப்புக்கொண்டு மத்திய அரசுக்கு கடிதம் எழுதிய தமிழக அரசு, 'சூப்பர் முதலமைச்சர்' பேச்சை கேட்டு, அத்திட்டத்தை செயல்படுத்த மறுத்து அரசியல் செய்தது. சூப்பர் முதலமைச்சரின் இந்த வேலையை நாடாளுமன்றத்தில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் சுட்டிக்காட்டினார். இப்போது, 'சூப்பர் முதலமைச்சர்' மீண்டும் தனது வேலையை காட்டியிருக்கிறார். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ்களில், ஜாதி பெயருக்கு முன்பு இந்து என்ற வார்த்தையை மீண்டும் இடம்பெறச் செய்ய வேண்டும். இந்திய அரசியலமைப்புக்கு எதிரான இந்த செயலை திமுக அரசு கைவிட வேண்டும் என வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தமிழகம் முழுவதும் நாளை முக்கிய இடங்களில் மின்தடை! எத்தனை மணி நேரம் தெரியுமா?
ஆடு வெட்டி புது சடங்கு உருவாக்கினது தான் பிரச்சனைக்கு காரணமே..! திருப்பரங்குன்றம் பின்னணியின் உண்மை உடைக்கும் திமுக எம்.பி தங்க தமிழ்ச்செல்வன்..!