உணவு டெலிவரி ஊழியர்களுக்கு 'குளு குளு' ஓய்வறை! தமிழ்நாடு அரசின் மகத்தான திட்டம்!

Published : Jun 11, 2025, 11:32 PM ISTUpdated : Jun 12, 2025, 09:31 AM IST
 Food Delivery Workers AC Restroom

சுருக்கம்

சென்னையில் உணவு டெலிவரி ஊழியர்களுக்கு ஏசி ஓய்வறை அமைக்கப்பட்டுள்ளது. பெண் ஊழியர்களுக்கு இந்த திட்டம் மிகவும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

AC Restroom Set Up for Food Delivery Workers: இந்தியாவில் சென்னை, பெங்களூரு, மும்பை, ஹைதராபாத் போன்ற பெரு நகரங்களில் ஸ்விக்கி, ஸ்மோட்டோ போன்ற உணவு டெலிவரி சேவை செய்யும் நிறுவனங்கள் 24 மணி நேரம் உணவு விநியோகம் செய்து வருகின்றன. இந்த நிறுவனங்களில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் இரவு, பகல் வெயில், மழை பாராமல் உணவுகளை டெலிவரி செய்து வருகின்றனர்.

உணவு டெலிவரி ஊழியர்களுக்கு ஓய்வறை

இதில் 10 சதவீதம் பெண் ஊழியர்களாக இருக்கும் நிலையில், இவர்கள் குடிநீர், கழிவறை போன்ற அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் அல்லாடி வருகின்றனர். வெயிலில் அலைந்து திரிந்து உணவு டெலிவரி செய்து விட்டு வந்தால் ஓய்வு எடுக்கக் கூட இவர்களுக்கு இடமில்லை. சாலை ஓரங்களிலும், மரங்களுக்கு அடியிலும் உணவு டெலிவரி ஊழியர்கள் ஓய்வெடுப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம்.

ஏசி ஓய்வறைகள்

தங்களுக்கு இதில் இருந்து ஒரு விடிவு காலம் பிறக்காதா? என ஏங்கித் தவித்த ஊழியர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் விதமாக ஒரு மகத்தான திட்டத்தை சென்னை மாநகராட்சி கொண்டு வந்துள்ளது. அதாவது உணவு டெலிவரி ஊழியர்கள் ஓய்வெடுப்பதற்காக அண்ணா நகர் மற்றும் கே.கே.நகரில் ஏசி ஓய்வறைகளை மாநகராட்சி பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது.

ஏசி ஓய்வறையில் என்னென்ன வசதிகள் உள்ளன?

சுமார் 600 சதுரடி பரப்பளவில் இந்த ஓய்வறை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் உள்ளே 20 அடி நீளம் 10 அடி அகலத்தில் கழிவறை, குடிநீர், செல்போன் சார்ஜ் செய்யும் வசதிகள் ஆகியவை இருக்கும். ஒரே நேரத்தில் 25 பேர் வரை இந்த ஏசி ஓய்வறையை பயன்படுத்த முடியும். மேலும் 20 டூவிலர் வரையும் பார்க்கிங் செய்து கொள்ள முடியும். உணவு டெலிவரி ஊழியர்கள் தங்களது அடையாள அட்டையை காட்டினால் மட்டுமே ஓய்வறைக்குள் அனுமதிக்கப்படுவார்கள். மேலும் ஓய்வறையில் காவலாளியும் நியமிக்கப்பட உள்ளனர்.

பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய திட்டம்

இந்த குளு குளு ஓய்வறைகள் அண்ணா நகரில் இன்று முதல் சோதனை அடிப்படையில் திறக்கப்பட்டுள்ளது சென்னையில் மயிலாப்பூர், தி. நகர், கே.கே.நகர், நுங்கம்பாக்கம், ராயப்பேட்டை போன்ற பகுதிகளில் இதுபோன்ற ஏசி ஓய்வறைகள் திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே முதன் முறையாக தமிழ்நாடு அரசு செயல்படுத்திய இந்த திட்டம் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய ஒரு திட்டமாக பார்க்கப்படுகிறது.

பெண் ஊழியர்களுக்கு வரப்பிரசாதம்

ஏனெனில் உணவு டெலிவரி ஊழியர்கள் எந்த அளவுக்கு கஷ்டப்படுகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். குறிப்பாக பெண் ஊழியர்களுக்கு இந்த திட்டம் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. இந்த திட்டம் குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், ''இந்தியா எதிர்காலத்தில் பின்பற்றும் திட்டங்களை இன்றே நிறைவேற்றுவதுதான் தமிழ்நாடு style! வெயிலில் வாடுபவருக்கு நிழல்மரமாக, தாகத்தில் தவிப்பவருக்கு ஒரு குவளை தண்ணீராக, துன்பத்தில் உழல்வோருக்கு ஆதரவுக்கரமாக இருப்பதுதான் திராவிட மாடல்'' என்று பெருமையுடன் கூறியுள்ளார்.

மற்ற மாநிலங்கள் பின்பற்றும்

ஏற்கெனவே தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் காலை உணவுத் திட்டத்தை மற்ற மாநிலங்கள் பின்பற்றத் தொடங்கி விடடன. இதேபோல் உணவு டெலிவரி ஊழியர்களுக்கு ஓய்வறை திட்டத்தையும் மற்ற மாநிலங்கள் பின்பற்றத் தொடங்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! குற்றவாளிகளுக்கு அடுத்தடுத்து ஜாமீன்! எதிர்பாராத ட்விஸ்ட் வைத்த காவல்துறை!
பெண் போலீசிடம் ஆசைவார்த்தை கூறி ஆசை தீர! வேலை முடிந்ததும் வேலையை காட்டிய வாலிபர்! விசாரணையில் அதிர்ச்சி!