பல்கலை. துணை வேந்தர்களை தமிழக அரசே நியமிக்க நடவடிக்கை... அறிவித்தார் மு.க.ஸ்டாலின்!!

Published : Jan 06, 2022, 02:41 PM IST
பல்கலை. துணை வேந்தர்களை தமிழக அரசே நியமிக்க நடவடிக்கை... அறிவித்தார் மு.க.ஸ்டாலின்!!

சுருக்கம்

பல்கலைக்கழகத் துணைவேந்தர்களைத் தமிழக அரசே நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

பல்கலைக்கழகத் துணைவேந்தர்களைத் தமிழக அரசே நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் 20க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் உள்ளன. மாநிலத்தின் ஆளுநராக இருப்பவரே, மாநிலப் பல்கலைக்கழகங்களின் வேந்தராக இருப்பார். பல்கலைக்கழகத்தின் தலைமைப் பொறுப்பாளராகத் துணைவேந்தர் இருப்பார். துணைவேந்தரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்வுக் குழுவை மாநில அரசு அமைக்கும். இந்த குழு பெறப்பட்ட விண்ணப்பங்களைப் பரிசீலித்து ஆளுநருக்குப் பெயரைப் பரிசீலனை செய்யும். ஆளுநர் இந்தப் பெயரைக் கலந்தாலோசித்து நியமனம் செய்வார். இந்த நிலையில் அண்மையில் மகாராஷ்டிர மாநிலத்தில், ஆளுநர் பல்கலைக்கழக வேந்தராகப் பதவி வகிக்கும் பொறுப்புக்கான அதிகாரங்கள் குறைக்கப்பட்டன. 

அதன்படி பல்கலைக்கழகத் துணைவேந்தர்களை மாநில ஆளுநரே நேரடியாக நியமிப்பதற்கு பதிலாக, மாநில அரசு பரிந்துரைக்கும் நபர்களில் இருந்து ஒருவரை ஆளுநர் தேர்வு செய்ய வேண்டும். இதற்கான மசோதா அம்மாநில சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது. பல்கலைக்கழகத் துணைவேந்தர் நியமனங்களில் ஆளுநருக்கும், மாநில அரசுக்கும் இடையேயான மோதல் போக்கு கடந்த அரை நூற்றாண்டு காலமாக இருந்து வரும் நிலையில், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் உயர் கல்வியில் ஆளுநரின் அதிகாரம் குறித்த விவாதம் மீண்டும் பேசும் பொருளாக மாறியது. மகாராஷ்டிர மாநிலத்தின் மசோதாவைத் தொடர்ந்து, தமிழ்நாட்டிலும் மாநில அரசின் உரிமைகளை நிலைநாட்டும் வகையில் புதிய திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

முன்னதாக அதிமுக ஆட்சிக் காலத்தில், காந்திராம கிராமியப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக எஸ்.மாதேஸ்வரன் மற்றும் கால்நடை பல்கலைக்கழகத் துணைவேந்தராக செல்வகுமார் நியமிக்கப்பட்ட விவகாரத்தில் ஆளுநருக்கு இத்தனை அவசரம் அழகல்ல என்று திமுக பொருளாளர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், பல்கலைக்கழகத் துணைவேந்தர்களைத் தமிழக அரசே நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மார்ச் மாதம் நடைபெற உள்ள பட்ஜெட் கூட்டத் தொடரில் சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்யப்படும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். பாமக சட்டப்பேரவை உறுப்பினர் ஜி.கே.மணி சட்டப்பேரவையில் கேட்ட கேள்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இவ்வாறு பதில் அளித்துள்ளார். இதன்மூலம் ஆளுநரின் அதிகாரம் குறைக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

PREV
click me!

Recommended Stories

அடுத்த 7 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்? வெளியான முக்கிய அப்டேட்
பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!