கோவில்பட்டி பட்டாசு ஆலை விபத்து... உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.3 லட்சம்... அறிவித்தார் மு.க.ஸ்டாலின்!!

By Narendran SFirst Published Feb 25, 2022, 3:49 PM IST
Highlights

கோவில்பட்டி பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

கோவில்பட்டி பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ராஜீவ் நகரைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவர் கோவில்பட்டி அருகே உள்ள துறையூரில் பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். இந்த ஆலையில் 45 கட்டிடங்கள் உள்ளன. இதில் ஒரு கட்டிடத்தில் பொட்டாசியம் நைட்ரேட், அலுமினியம் பவுடர், சல்பர் ஆகிய 3 ரசாயனங்களைக் கொண்டு, ஃபேன்சி ரக பட்டாசுகள் தயாரிப்பதற்காக குழாயில் மருந்து செலுத்தும் பணி நடந்தது. அப்போது திடீரென அங்கு வெடி விபத்து ஏற்பட்டது. இதில், அந்தக் கட்டிடம் இடிந்து விழுந்து தரைமட்டமாகியது.

இதில் சிக்கிய தொழிலாளர்கள் கோவில்பட்டி அருகே ஈராச்சியைச் சேர்ந்த ராமர், பசுவந்தனை அருகே தொட்டம்பட்டியைச் சேர்ந்த ஜெயராஜ், குமாரபுரத்தைச் சேர்ந்த தங்கவேல், கோவில்பட்டி அருகே நாலாட்டின்புதூரைச் சேர்ந்த கண்ணன் ஆகிய 4 பேரும் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தனர். 45 கட்டடங்கள் உள்ள ஆலையில், ஒரு கட்டடத்தில் ரசாயனங்களைக் கொண்டு ஃபேன்சி வெடி தயாரிப்பதற்காக் குழாயில் மருந்து செலுத்தும் பணி நடந்துவந்துள்ளது. அப்போது எதிர்ப்பாரத விதமாக ஏற்பட்ட  வெடி விபத்தில் கட்டிடம் இடிந்து தரைமட்டமானது. இந்த நிலையில் இடிபாடுகளில் சிக்கிய 4 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டம், துறையூர் கிராமத்தில் இயங்கி வந்த பட்டாசுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் கொப்பம்பட்டியைச் சேர்ந்த ராமர் மற்றும் தங்கவேல்; தொட்டம்பட்டி, பசுவந்தனையைச் சேர்ந்த ஜெயராஜ், நாலாட்டின்புதூரைச் சேர்ந்த மாடமுத்து ஆகிய நான்கு நபர்கள் உயிரிழந்த துயரச் செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், இந்த வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

click me!