பொங்கல் பண்டிகையை ஒட்டி 3,186 காவலர்கள், சீருடை பணியாளார்கள், தீயணைப்பு வீரர்களுக்கு பொங்கல் பதக்கம் வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பொங்கல் பண்டிகையை ஒட்டி 3,186 காவலர்கள், சீருடை பணியாளார்கள், தீயணைப்பு வீரர்களுக்கு பொங்கல் பதக்கம் வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் அதற்கான ஏற்பாடுகளை மக்கள் மேற்கொண்டு வருகின்றனர். பொங்கலுக்கு அரசு விடுமுறை அறிவித்துள்ளதை அடுத்து வெளியூர்களில் வசிக்கும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்துள்ளனர். இந்த நிலையில் 2022 பொங்கல் பண்டிகையை ஒட்டி 3,186 காவலர்கள், சீருடை பணியாளார்கள், தீயணைப்பு வீரர்களுக்கு பொங்கல் பதக்கம் வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித் துறை, சிறை மற்றும் சீர்திருத்தத்துறைகளில் சிறப்பாக பணியாற்றும் பணியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையின் போது தமிழக முதல்வரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு, வழங்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் இந்த ஆண்டு 3,186 காவலர்களுக்கு பதக்கங்கள் வழங்குவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுக்குறித்து வெளியான அறிவிப்பில், காவல் துறையில் (ஆண்/பெண்) காவலர் நிலை-1, தலைமைக் காவலர், சிறப்பு சார்பு ஆய்வாளர் மற்றும் ஹவில்தார் நிலைகளில் உள்ள 3000 பணியாளர்களுக்கு தமிழக முதல்வரின் காவல் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதேபோல் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் முன்னணி தீயணைப்போர், ஓட்டுநர் கம்மியர் மற்றும் தீயணைப்போர் ஆகிய நிலைகளில் உள்ள 120 அலுவலர்களுக்கு பதக்கம் வழங்கப்பட உள்ளது.
மேலும், சிறை மற்றும் சீர்திருத்தத் துறையில் உள்ள 60 பேருக்கும் , காவல் வானொலி பிரிவு, நாய் படைப் பிரிவு மற்றும் காவல் புகைப்படக் கலைஞர்கள் பிரிவுகளில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் என ஒவ்வொரு பிரிவிலும் தலா 2 அதிகாரிகள் வீதம் 6 பேருக்கு தமிழக முதலமைச்சரின் சிறப்பு பணிப்பதக்கங்கள் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். பதக்கம் பெறுபவர்களுக்கு 2022 பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் மாதாந்திர பதக்கப்படி 400 ரூபாய் வழங்கப்படும் என்றும், இவர்கள் அனைவருக்கும் பின்னர் நடைபெறும் சிறப்பு விழாவில் பதக்கம் மற்றும் முதல்வர் கையொப்பத்துடன் கூடிய பதக்கச்சுருள் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு காவல்துறையினர் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.