திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு துறைகளில் பல ஆக்கப்பூர்வமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் மக்களின் ஆன்மீக உணர்வை மதிக்கும் வகையில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் கோயில் நிலங்கள் மீட்பு, கோயில் பணியாளர்களுக்கு உதவித் தொகை உயர்வு, கோவில் புனரமைப்புப் பணிகள் ஆகியவை இந்து சமய அறநிலையத்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தித்தொகுப்பில் காணலாம்.
கோயில் நிலங்கள் மீட்பு:
தமிழகத்தில் கோயில்களின் எண்ணிக்கை அதிகம். அப்படி இருக்கையில் கோயில்களுக்கான நிலங்களும் அதிகம். இந்த நிலையில் கோயில் நிலங்களை தனி நபரோ அல்லது நிறுவனங்களோ ஆக்கிரமித்திருந்தனர். அவ்வாறு ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கோயில் நிலங்களை மீட்க திமுக அரசு முடிவு செய்ததை அடுத்து களத்தில் இறஙகியது இந்து அறநிலையத் துறை.
கடந்த 2021 மே 7 ஆம் தேதி முதல் 2022 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் தேதி வரை மட்டும் மீட்கப்பட்ட ஆக்கிரமிப்புகள், சொத்துக்கள் பற்றிய விவரங்களை இந்து சமய அறநிலையத் துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, சுமார் 3000 கோடி ரூபாய் மதிப்பிலான கோயிலுக்கு சொந்தமான நிலங்கள், கட்டிடங்கள், மனைகள், குளங்கள் என பல சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் மீட்கப்பட்ட நிலங்களை அதற்குரிய கோயில்களிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கோயில் பணியாளர்களுக்கு உதவித் தொகை உயர்வு:
கோவில்களில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகள் மற்றும் பிற பணியாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, அவர்களுக்கு 4000 ரூபாய் உதவித் தொகை, 10 கிலோ அரிசி மற்றும் 15 வகை மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டது.
இதேபோல் ஓய்வுப் பெற்ற அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், இசை கலைஞர்கள் ஆகியோருக்கு வழங்கப்பட்டு வந்த 1000 ரூபாய் ஓய்வூதியம் 3000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட்டது. கிராமக் கோவில் பூசாரிகளுக்கான ஓய்வூதியம் 3000 ரூபாயில் இருந்து 4,000 ரூபாயாக உயர்த்தப்பட்டது. கோவில்களில் மொட்டை போடுவதற்கு கட்டணம் விலக்களித்து, அப்பணியை மேற்கொள்ளும் நபர்களுக்கு மாதந்தோறும் 5,000 ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
கோவில் புனரமைப்புப் பணிகள்:
தமிழகத்தில் இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் இருக்கும் கோயில்களை புனரமைக்க திமுக அரசு முடிவு செய்ததன் பேரில் சுமார் 400க்கும் மேற்பட்ட பழமையான கோயில்களில் புனரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் குடமுழுக்கு நடத்தவும் திட்டமிடப்பட்டப்பட்டுள்ளது. கோயில் புனரமைப்பு பணி மற்றும் குடமுழுக்கு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக சுமார் 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல், பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை செய்து தருவதிலும் திமுக அரசு கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.