
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்னும் சில நாட்கள் மூடு பனி தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகரிலும் மூடுபனி தொடரும் என்றும் ஆய்வு மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் சில நாட்களாக பனியின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
காலை நேரங்களில் வாகனங்கள், ஒளி விளக்குகளுடன் செல்ல வேண்டியுள்ளது. மூடு பனி காரணமாக பொதுமக்கள் பெரிதும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர்.
காலை நேரங்களில் சுமார் 8 மணி வரைக்கும் இந்த மூடுபனி நீடிக்கிறது. இதனால் பொதுமக்கள், வெளியில் செல்லும்போது, மப்ளர் போன்ற ஆடைகளை அணிந்து செல்கின்றனர்.
மூடுபனி காரணமாக சில இடங்களில் வாகனங்கள் மோதிக்கொள்ளும் நிலையும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் பனியின் தாக்கம் மேலும் சில நாட்கள் தொடரும் என சென்னை வானிலை மைய ஆய்வு அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். நீலகிரி உள்ளிட்ட மலைப்பகுதிகளில் மூடுபனியின் தாக்கம் தொடர்ந்து சில நாட்கள் அதிகரிக்கும்.
அதேபோன்று, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அதிகாலை வேளைகளில் பனியின் தாக்கம் மேலும் சில நாட்கள் நீடிக்கும் என்றும் அவர் தெரிவித்தார். சென்னை மற்றும் புறநகரைப் பொறுத்தவரை மூடு பணி தொடரும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.