சோடா பாட்டில் வீசுவோம் பேச்சுக்கு மன்னிப்பு கேட்ட ஜீயர்!

First Published Jan 28, 2018, 3:24 PM IST
Highlights
Apologist Sathakopa Ramanuji Jeeyar


சோடா பாட்டில் வீசுவோம் என்ற பேச்சு தொடர்பாக ஸ்ரீவில்லிபுத்தூர் சடகோப ராமானுஜ ஜீயர், ஆண்டாளிடம் சாஷ்டாங்கமாக விழுந்து மன்னிப்பு கோரியதாக தெரிவித்துள்ளார்.

ஆண்டாள் தொடர்பாக ஆய்வாளர் கருத்தை கவிஞர் வைரமுத்து மேற்கோள் காட்டியதையடுத்து அவர் அவதூறாக பேசிவிட்டார்; இழிவுபடுத்திவிட்டார் என ஒரு சமூகத்தினர் கொந்தளித்தனர். இதையடுத்து வைரமுத்து வருத்தம் தெரிவித்தார்.

ஆனாலும் வைரமுத்து குடும்பத்தை மிக இழிவாக விமர்சித்தனர். இதனால் சொல்லாத சொல்லுக்கு பழியேற்கிறேனே என உருக்கமாக வைரமுத்து மீண்டும் வீடியோ மூலம் விளக்கம் அளித்திருந்தார்.

இருப்பினும் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் சந்நிதியின் மண்டியிட்டு வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. இக்கோரிக்கையை முன்வைத்து நடைபெற்ற போராட்டத்தில் பேசிய ஜீயர் சடகோப ராமானுஜம், எங்களுக்கும் கல்லெறியவும் தெரியும்; சோடா பாட்டில்கள் வீசவும் தெரியும் என  சடபோக ராமானுஜ ஜீயர் கூறியிருந்தார்.

சடகோப ராமானுஜ ஜீயர் கூறியது, பெரும் சர்ச்சைக்குள்ளாகியது. இதையடுத்து, அவருக்கு எதிராக பல்வேறு தரப்பினர் கண்டனக்குரல் எழுப்பினர். இந்த நிலையில், சடகோப ராமானுஜ ஜீயர், சோடா பாட்டில் வீசுவோம் என்ற பேச்சு தொடர்பாக மன்னிப்பு கோரியுள்ளார்.

இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு ஜீயர் பேட்டி அளித்துள்ளார். அதில், அறவழியில்தான் போராட வேண்டும் என்பதே எங்களின் நோக்கம். நாங்கள் பேசிய அந்த வார்த்தைக்காக ஸ்ரீ ஆண்டாள் நாச்சியரிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டோம். 

இந்து மக்கள் அனைவர் மனதிலும், ஜீயர் இப்படி பேசியது தவறு என்று வருந்துகிறார்கள். அதற்காகவும் நாங்கள், தாயாரிடம் சாஷ்டாங்கமாக விழுந்து மன்னிப்பு கேட்டுக் கொண்டோம்.

click me!