இரண்டு மாதங்களாக சம்பளம் தராததால் துப்புரவுத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு; ஆட்சியரிடம் முறையீடு...

First Published Jul 18, 2018, 1:42 PM IST
Highlights
cleaning workers livelihood affected for not giving two months salary


இராமநாதபுரம்

இரண்டு மாதங்களாக சம்பளம் தராததால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட துப்புரவுத் தொழிலாளர்கள் இராமநாதபுரம் ஆட்சியரிடம் நேரில் சென்று முறையிட்டனர். அதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்தார்.

தமிழ்நாடு தூய்மைத் தொழிலாளர்கள் சங்கத்தினர் திரளாக இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேற்று வந்தனர். இவர்களுக்கு அச்சங்கத்தின் மாவட்டத் தலைவர் ராஜமாணிக்கம் தலைமைத் தாங்கினார்.

இவர்கள், ஆட்சியர் நடராஜனிடம் மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில், இராமேசுவரம் நகராட்சியில் 136 பேர் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவுத் தொழிலாளர்களாக பணியாற்றுகின்றனர்.

இவர்களில் 68 பே மட்டுமே தங்களுக்கான சம்பளத்தை சரியாக பெற்றுள்ளனர். மீதமுள்ள 68 பேருக்கு கடந்த இரண்டு மாதங்களாக சம்பளம் தரப்படவில்லை. இதுகுறித்து நகராட்சி ஆணையாளரிடம் பலமுறை புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து இன்னும் 60 பேரை அழைத்து வந்துள்ளனர். அவர்கள் மூலமாக இராமேசுவரத்தில் துப்புரவுப் பணியை மேற்கொள்கிறது நகராட்சி நிர்வாகம்.

எங்களுடைய வாழ்வாதாரம் மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது. எனவெ, எங்களுக்கு தரவேண்டிய இரண்டு மாத சம்பளத்தை உடனே தரவேண்டும். அதற்காக இராமேசுவரம் நகராட்சி ஆணையாளருக்கு உத்தரவிட வேண்டும்.

மேலும், வெளிமாநில ஆட்களை நியமிக்காமல், எங்களையே அந்தப் பணியில் மீண்டும் அமர்த்த வேண்டும்" என்று அதில் கூறியிருந்தனர். 

இந்த மனுவைப் பெற்றுக் கொண்ட ஆட்சியர் இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். அதன்பின்னர், திரளாக வந்த துப்புரவுத் தொழிலாளர்கள் அங்கிருந்து புறப்பட்டனர்.

click me!