
திரைப்படங்கள், பெரும்பாலான மக்கள்ன் வாழ்க்கையில் ஒன்றிய அம்சமாகிவிட்டது. சினிமா பார்க்க தியேட்டர்களுக்கு செல்வது ஒரு முக்கிய அம்சமாகவும் ஆகியுள்ளது. ஆனால், என்னதான் தியேட்டர்களில் ஒலி ஒளி அமைப்புகள், இருக்கைகள் என எல்லாம் சரியாக இருந்தாலும், பலரும் தியேட்டர்களுக்குச் செல்வதைத் தவிர்க்கக் காரணம், டிக்கெட் விலை, அடுத்தது பார்க்கிங் கட்டணக் கொள்ளை.
டிக்கெட் விலை குறித்து நடிகர்கள் எவருமே வாய் திறப்பதில்லை. சாமானிய ரசிகன் தன் பாக்கெட்டைப் பதம் பார்க்கும் படியாக டிக்கெட் கட்டணம் இருந்தாலும், திரையரங்குக்குச் சென்று படம் பார்ப்பதில், பெருமைப் படுகிறான். அதற்கு எந்த நடிகரும் எதிர்த்து வாய் திறப்பதில்லை. காரணம் தங்கள் பாக்கெட் நிரம்பியாக வேண்டும். அதுபோல், தியேட்டர்களில் வசூலிக்கப்படும் வாகன நிறுத்தக் கட்டணக் கொள்ளையையும் தட்டிக் கேட்பதில்லை. காரணம் தங்கள் படம் ஓடியாக தியேட்டர்களின் ஒத்துழைப்பு தேவை.
தற்போதைய சூழலில், பெரும்பாலான தியேட்டர்களும் அரசியல்வாதிகளின் பினாமிகள் கைகளில் இருப்பதால், என்னதான் பார்க்கிங் கட்டணத்தை அரசு நிர்ணயித்தாலும் அதை தியேட்டர்கள் சரியாக கடைப்பிடித்தாக வேண்டுமே! ஆனால் அவ்வாறு செய்வதில்லை.
இப்போதும் திரையரங்குகளில் பார்க்கிங் கட்டணத்தை தமிழக அரசு நிர்ணயித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி,
மாநகராட்சிகளில் உள்ள திரையரங்குகளில் கார் - ரூ.20; டூவீலர் - ரூ.10 என்றும்,
நகராட்சிகளில் கார் - ரூ.15; டூவீலர் - ரூ.7 என்றும்
கிராமங்களில்... கார் - ரூ. 5; டூவீலர் - ரூ. 3 என்றும்
சைக்கிள்களுக்கு இலவசம் என்றும் அறிவித்துள்ளது அரசு.
ஆனால், இந்தக் கட்டண நிர்ணயம் எல்லாம் பினாமிகளின் கைகளில் சிக்கியிருக்கும் தியேட்டர்களில் செல்லுபடியாகுமோ? அப்படியே புகார் செய்தால்தான் அவற்றை காவல் துறை காதில் போட்டுக்கொள்ளுமோ? இதுதான் கேள்வி!