
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி அதே இடத்தில் நீடிப்பதாகவும் ஆழ்கடல் மீனவர்கள் கரைக்கு திரும்ப வேண்டும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஒகி புயலால் கன்னியாக்குமரி மாவட்டமே தலைகீழாக புறட்டிபோடப்பட்டுள்ளது. மீனவர்கள் பலர் கடலுக்கு சென்றவர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர்.
இதனிடையே வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், இதுகுறித்து வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அடுத்த 12 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளது எனவும் தாழ்வு மண்டலம் வடக்கு தமிழகத்தை நோக்கி நகர கூடும் எனவும் தெரிவித்தார்.
அடுத்த 2 தினங்களுக்கு தமிழகம், புதுவையில் ஒருசில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது எனவும் அடுத்த 4 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் குறிப்பிட்டார்.
ஆழ்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருப்பவர்கள் உடனடியாக கரைக்கு திரும்ப வேண்டும் எனவும் அடுத்த 2 நாட்களை பொறுத்தவரை ஒரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.