
கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகையான கிறிஸ்துமஸ் வரும் 25ம் தேதி கொண்டாடப்பட நிலையில், தமிழகத்தில் ஒவ்வொரு கட்சியும் கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடி வருகின்றன. அந்த வகையில் தவெக சார்பில் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா மாமல்லபுரத்தில் இன்று நடந்தது. இந்த விழாவில் தவெக தலைவர் விஜய், ஆற்காடு நவாப் முகமது அலி, கிறிஸ்தவ மத போதகர்கள் பலர் கொண்டனர்.
குழந்தைகளுடன் இணைந்து கேக் வெட்டி கிறிஸ்துமஸ் கொண்டாடிய விஜய், அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்தார். இந்த விழாவில் பேசிய கிறிஸ்தவ மத போதகர்கள் 2026 சட்டப்பேரவை தேர்தலில் விஜய்க்கு முழு ஆதரவு கொடுப்பதாக தெரிவித்துள்ளது தமிழக அரசியலில் பேசுபொருளாகியுள்ளது.
தவெக கிறிஸ்துமஸ் விழாவில் பேசிய கிறிஸ்தவ மத போதகர் ஒருவர், ''நாங்கள் அரசியல் பேசுவதற்காக வரவில்லை. ஆனால் அவருக்கு தோளுக்கு தோளாக நிற்க இங்கு வந்திருக்கிறோம். நாங்கள் கிறிஸ்தவர்கள் 234 தொகுதியிலும் இந்திய ஊழியர் ஐக்கியம் கிறிஸ்தவ ஊழியர் ஐக்கியம் என்ற மாபெரும் இயக்கத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். நாங்கள் உங்களுக்கு தோளுக்கு தோளாக (விஜய்) நிற்போம். எல்லா நேரங்களிலும் நாங்கள் உங்களுடன் நிற்பதாக இங்கு வந்துள்ளோம்.
விஜய் முதல்வராவது உறுதி
ஏன் என்று சொன்னால் ஒரே ஒரு காரியத்தை சொல்லுகிறேன். தமிழகத்தில் பல ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கும் திராவிட ஆட்சியில் சிறுபான்மை மக்களுக்காக பல கோரிக்கைகளை வைத்தோம். அதில் சில முக்கியமான கோரிக்கைகள். அதைக்கூட போராடி போராடி பெற முடியாமல் சோர்ந்துபோய் வந்திருக்கிறோம். ஆனால் அந்த கோரிக்கைகளை அன்புத் தளபதி, புரட்சித் தளபதி விஜய் நிச்சயமாக நிறைவேற்றுவார். நீங்கள் (விஜய்) 2026ம் ஆண்டில் தமிழகத்தை ஆள்வீர்கள். அது நிச்சயமாக நடக்கும்'' என்று தெரிவித்துள்ளார்.
சிறுபான்மையின வாக்குகளை அள்ளுகிறதா தவெக?
தமிழகத்தை பொறுத்தவரை கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள் கொண்ட சிறுபான்மையின வாக்குகள் திமுக, அதிமுக என மாறி மாறி திராவிட கட்சிகளுக்கே சென்று வருகின்றன. இதில் அதிமுகவை விட திமுகவுக்கு சிறுபான்மையின வாக்குகள் அதிகம். வரும் தேர்தலில் அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளதால் சிறுபான்மையின வாக்குககளை மொத்தமாக அள்ள திமுக திட்டமிட்டது. ஆனால் திமுக தலையில் இடியை இறக்குவது போல் சிறுபான்மையின வாக்குகளுக்கு தவெகவும் தூண்டில் போட்டு வருகிறது.
கிறிஸ்தவ சபைகளில் தவெகவுக்கு ஆதரவாக பிரசாரம்
தமிழகத்தில் ஒரு சில கிறிஸ்தவ சபைகளில் அந்த சபைகளின் மத போதகர்கள், 'வரும் தேர்தலில் விஜய்க்கும், தவெக வேட்பாளர்களுக்கும் ஓட்டுபோட்டுங்கள்' என தேர்தல் பிரசாரம் செய்வதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுவே தவெக பக்கம் கிறிஸ்தவ ஓட்டுகள் சாய்ந்ததற்கான உதாரணம் என அரசியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் சிறுபான்மையின வாக்குககளை மொத்தமாக அள்ளியது யார்? என்பது தேர்தலுக்கு பிறகே தெரியவரும்.