வாகன விபத்தில் தந்தை, மகன் பலி... உறவினர்கள் சாலை மறியலால் பரபரப்பு!

By vinoth kumar  |  First Published Dec 21, 2018, 5:51 PM IST

வாகன விபத்தில் தந்தை, மகன் இறந்ததை தொடர்ந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமியும் பரிதாபமாக இறந்தாள். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள், சாலை மறியலில் ஈடுபட்டனர்.


வாகன விபத்தில் தந்தை, மகன் இறந்ததை தொடர்ந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமியும் பரிதாபமாக இறந்தாள். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள், சாலை மறியலில் ஈடுபட்டனர்.

வாலாஜாபாத் அருகே தென்னேரி அடுத்த கோவளவேடு விநாயகர் கோயில் தெருவை சேர்ந்தவர் சேகர் (38). தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி உமா. இவர்களுக்கு லோகேஷ் (13) காமேஷ் (12) ஆகிய மகன்கள் உள்ளனர். இருவரும் அதே பகுதி குண்ணம் அரசு உயர்நிலைப்பள்ளியில் முறையே 7, 8ம் வகுப்பு படிக்கின்றனர். 

Tap to resize

Latest Videos

undefined

கடந்த 14ம் தேதி காலை சேகர், வழக்கம்போல் மகன்களை அழைத்து கொண்டு பள்ளிக்கு புறப்பட்டார். வாலாஜாபாத் – சுங்குவார்சத்திரம் சாலையில் குண்ணம் அருகே சென்றபோது, தனது தம்பி மகள் தனலட்சுமியையும் (11) பைக்கில் அழைத்து சென்றார். அப்போது, குண்ணம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் இருந்து ஒரு பைக் வேகமாக வெளியே வந்தது. இதனால், சேகர் வலதுபுறமாக ஒதுங்கினார். அந்த நேரத்தில், எதிரே வேகமாக வந்த டாரஸ் லாரி, பைக் மீது மோதியதில், சேகர், லோகேஷ் ஆகியோர் இறந்தனர்.

இதில் படுகாயமடைந்த சிறுமி தனலட்சுமியை ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி தனலட்சுமி, நேற்று அதிகாலை பரிதாபமாக இறந்தாள். இதையறிந்ததும், ஆத்திதடைந்த சேகரின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள், தனியார் நிறுவனத்தில் இருந்து பைக் வந்ததால், இந்த விபத்து ஏற்பட்டு 3 பேர் இறந்ததாக கூறி, நேற்று காலை 100க்கு மேற்பட்டோர், தனியார் தொழிற்சாலை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

தகவலறிந்து சுங்குவார்சத்திரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சமரசம் பேசினர். அப்போது, 3 பேர் உயிர் பலிக்கு காரணமான தனியார் நிறுவனம் சார்பில், சேகர் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என கோஷமிட்டனர். இதுபற்றி, தனியார் நிறுவனத்திடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதித்தது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், நாங்கள் ஏற்கனவே சேகர், அவரது மகன் இறந்தபோது மறியலில் ஈடுபட்டு தனியார் நிறுவன ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினோம். அதற்கு, கம்பெனி நிர்வாகத்திடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறினர். ஆனால் இப்போது போலீசார், தனியார் நிறுவன ஊழியருக்கு ஆதரவாக பேசுகிறார். மறியலில் ஈடுபடும் எங்களை கைது செய்வதாக மிரட்டுகின்றனர். இதற்கு மாவட்ட நிர்வாகமும், எஸ்பியும் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், கலெக்டர் அலுவலகம் மற்றும் எஸ்பி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்றனர்.

click me!