அண்ணா பல்கலைக்கழகத்தில் ஏபிஜே அப்துல் கலாம் சிலை...! திறந்து வைத்த முதலமைச்சர் ஸ்டாலின்

By Ajmal Khan  |  First Published Oct 15, 2023, 12:36 PM IST

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம்  பிறந்த நாளையொட்டி சென்னை, கிண்டி, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம்  திருவுருவச் சிலையை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.


அப்துல்கலாம் பிறந்தநாள்

  இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானியாகவும், இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு பெரும் வழிகாட்டியாகவும் திகழ்ந்தவர்  முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம், 1931-ஆம் ஆண்டு. அக்டோபர் மாதம் 15-ஆம் நாள், இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரத்தில் திரு.ஜைனுலாப்தீன் மற்றும் திருமதி. ஆஷியம்மா ஆகியோருக்கு மகனாக டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் அவர்கள் பிறந்தார். டாக்டர் அப்துல் கலாம் அவர்கள், இராமேஸ்வரத்தில் பள்ளிப் படிப்பை முடித்து, திருச்சிராப்பள்ளியிலுள்ள செயின்ட் ஜோசப் கல்லூரியில் இயற்பியல் பட்டப்படிப்பு பயின்றார். 1955 ஆம் ஆண்டு தன்னுடைய விண்வெளி பொறியியல் படிப்பை சென்னையிலுள்ள எம்.ஐ.டி-யில் தொடங்கிய டாக்டர் அப்துல் கலாம் அவர்கள், பின்னர் அதே கல்லூரியில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.

Tap to resize

Latest Videos

ஏவுகனை நாயகன்

மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் வானூர்தி அபிவிருத்தி பிரிவில் விஞ்ஞானியாக தன்னுடைய ஆராய்ச்சி வாழ்க்கையைத் தொடங்கிய டாக்டர் அப்துல் கலாம் அவர்கள், பின்னர், இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் (ISRO) தனது ஆராய்ச்சிப்பணிகளைத் தொடர்ந்து, துணைக்கோள் ஏவுகணைக் குழுவில் (SLV) செயற்கைக்கோள் ஏவுதலில் முக்கிய பங்காற்றினார். மேலும், SLV -III ராக்கெட்டைப் பயன்படுத்தி ரோகினி-1 என்ற துணைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவச்செய்தார்.

மக்களின் ஜனாதிபதி அப்துல்கலாம்

1998 ஆம் ஆண்டு பொக்ரான் அணு ஆயுத சோதனையில் முக்கிய பங்காற்றியுள்ளார். "இந்தியாவின் ஏவுகணை நாயகன்" என்றும் "அணுசக்தி நாயகன்" என்றும் அவர் போற்றப்பட்டார். இந்தியாவின் 11 வது குடியரசு தலைவராக ஜூலை 25 ஆம் நாள் 2002ல் டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் அவர்கள் பதவியேற்றார். 2007 ஆம் ஆண்டு வரை குடியரசுத் தலைவராக இருந்த இவர் "மக்களின் ஜனாதிபதி" என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டார். மாணவர்களிடம் மிகுந்த அன்பு கொண்ட டாக்டர் அப்துல் கலாம் அவர்கள், "கனவு காணுங்கள். அந்தக் கனவு உறக்கத்தில் வரும் கனவாக இருக்கக் கூடாது. உறக்கத்தை விரட்டும் கனவாக இருக்க வேண்டும்" என்று மாணவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டினார். 

அப்துல் கலாம் சிலை திறப்பு

இதனிடையே  டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் அவர்களுக்கு சிறப்பு சேர்க்கும் வகையில், சென்னை, கிண்டி, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் ஏ.பி.ஜெ. அப்துல் கலாமுக்கு புதிதாக சிலை அமைக்க சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து அந்த பணிகளை முடிவடைந்ததனையடுத்து இன்று அப்துல்கலாமின் பிறந்தநாளையொட்டி புதிதாக நிறுவப்பட்டுள்ள முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் அவர்களின் திருவுருவச் சிலையை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இதையும் படியுங்கள்

பாக். கிரிக்கெட் வீரர்களுக்கு எதிராக “ஜெய்ஸ்ரீராம்” முழக்கம்.!ஏற்றுக்கொள்ள முடியாதது- உதயநிதி ஸ்டாலின் கண்டனம்

click me!