பேனா வடிவத்தில் கருணாநிதி நினைவிடம்...! விரைவாக நடைபெற்று வரும் பணிகள்... ஸ்டாலின் கூறிய புதிய தகவல்

Published : May 29, 2022, 04:25 PM IST
பேனா வடிவத்தில் கருணாநிதி நினைவிடம்...! விரைவாக நடைபெற்று வரும் பணிகள்... ஸ்டாலின் கூறிய புதிய தகவல்

சுருக்கம்

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி திருவுருவச் சிலையை குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு திறந்துவைத்த நிலையில் நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.  

 

பேனா வடிவில் கலைஞர் நினைவிடம்

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்தநாள் விழா தொடர்பாக திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் திமுக உடன்பிறப்புகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில் ‘வாழ்வில் ஒரு பொன்னாள்’ என்பதற்கான உண்மையான பொருளை விளக்கிடும் நாளாக மே 28 அமைந்திருந்தது என்றால் அது மிகையாகாது. நம் உயிர்நிகர் தலைவர் - நவீனத் தமிழ்நாட்டின் தந்தை - முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்குத் தமிழ்நாடு அரசின் சார்பில் நிறுவப்பட்ட முதல் திருவுருவச் சிலையை இந்தியக் குடியரசின் துணைத் தலைவர் மாண்புமிகு வெங்கையா நாயுடு அவர்கள் திறந்து வைத்த நிகழ்வு என்பது நம் ஒவ்வொருவருக்கும் மிகவும் பெருமைக்குரிய ஒன்றாகும். 
தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற முறையில் திருவுருவச் சிலை திறப்பு விழாவுக்குத் தலைமை வகித்த உங்களில் ஒருவனான நான் குறிப்பிட்டதுபோல, முத்தமிழறிஞர் கலைஞரின் சிலையினைத் திறந்து வைத்திட குடியரசுத் துணைத் தலைவர் மிகவும் பொருத்தமானவர் என்பதை அவரது பேச்சு நிரூபித்து விட்டது. தலைவர் கலைஞர் மீது மாறாத அன்பு கொண்டிருக்கும் குடியரத் துணைத் தலைவர் மாண்புமிகு வெங்கையா நாயுடு அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். முத்தமிழறிஞர் அவர்கள் தன் அண்ணனாம் பேரறிஞர் அண்ணா அருகே ஓய்வு கொள்ளும் வங்கக் கடற்கரையில் அவருக்கான நினைவிடம் மிகச் சிறப்பாகவும் வெகு விரைவாகவும் அமைக்கப்பட்டு வருகிறது. தன்னிடமிருந்து செங்கோலைப் பறித்தாலும் எழுதுகோலை எவராலும் பறித்திட முடியாது என்று அடிக்கடி சொல்வார் தலைவர் கலைஞர். படைப்பாற்றல் மிக்க எழுதுகோலால் செங்கோலை மீட்டு, அந்தச் செங்கோலைத் தன் எழுதுகோல் இட்ட சாதனைத் திட்டங்களுக்கான கையெழுத்துகளால் வழிநடத்திச் சென்ற வரலாறு தலைவர் கலைஞர் அவர்களுக்கு மட்டுமே உண்டு. அதனால்தான் எழுதுகோல் (பேனா) வடிவில் அவருடைய நினைவிடம் தமிழ்நாடு அரசின் சார்பில் அமைக்கப்பட்டு வருகிறது.

கருணாநிதி சிலை உடைப்பு

 வங்கக் கடற்கரையில் நம் தங்கத் தலைவருக்கு நினைவிடம் உருவாகி வரும் நிலையில், அண்ணா சாலையில் அவருக்குத் திருவுருவச் சிலை அமைத்திட வேண்டும் என்பதும் நம் நெடுநாள் எண்ணமாகும். அதற்குக் காரணம், ஏற்கனவே அந்த அண்ணா சாலையில், தந்தை பெரியார் அவர்களின் விருப்பத்தினை நிறைவேற்றும் வகையில், திராவிடர் கழகத்தின் சார்பில் அன்னை மணியம்மையார் அவர்கள் நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் அவர்களுக்கு முழு உருவச் சிலை அமைத்தார்கள். தவத்திரு குன்றக்குடி அடிகளார் உள்ளிட்டோர் அந்த விழாவில் பங்கேற்றனர். தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். அவர்கள் இறந்தபோது, அரசியல் காழ்ப்புணர்வு காரணமாக தலைவர் கலைஞரின் சிலையைக் கடப்பாரையால் இடித்துத் தள்ளியதை அன்றைய அரசாங்கத்தாரும் காவல்துறையினரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். தன் சிலை உடைக்கப்பட்டதை எண்ணித் தலைவர் கலைஞர் கவலைப்படவில்லை. கவிதை எழுதினார். “உடன்பிறப்பே..! செயல்படவிட்டோர் சிரித்து மகிழ்ந்தாலும், அந்த சின்னதம்பி என் முதுகில் குத்தவில்லை. நெஞ்சில்தானே குத்துகிறான். அதனால் நிம்மதி எனக்கு" என்று தன் வலிகளையும் இலக்கிய வார்த்தைகளாக்கியவர் நம் தலைவர். இதனைத் திருவுருவச் சிலை திறப்பு விழாவிலும் நான் குறிப்பிட்டேன். சென்னை அண்ணா சாலையில் நம் ஆருயிர்த் தலைவரின் சிலை சிதைக்கப்பட்டு, ஏறத்தாழ 35 ஆண்டுகள் கழித்து, அதே அண்ணா சாலையில், தற்போதைய வளர்ச்சி - போக்குவரத்து ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு எந்த இடத்தில் சிலை அமைக்கலாம் என்று சிந்தித்தபோது, என் எண்ணத்தில் தோன்றிய ஒரே இடம், ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகம்தான். அதற்கான காரணத்தை, அன்புத் தலைவரின் உடன்பிறப்புகளான நீங்கள் அறியாதவர்களல்ல. அந்த வளாகத்தில்தான் எழில்மிகு புதிய தலைமைச் செயலகக் கட்டடத்தை, இரவும் பகலும் கண்ணயராமல் நேரில் வந்து பார்வையிட்டுச் சிறப்பான முறையிலே உருவாக்கினார்.

குறுகிய காலத்தில் சிலை

 முதலமைச்சராக இருந்த நம் உயிர்நிகர் தலைவர். நேர்த்தியாகவும் வசதியாகவும் அமைக்கப்பட்ட புதிய தலைமைச் செயலகத்தை இந்தியாவின் பிரதமராக இருந்த டாக்டர் மன்மோகன்சிங் அவர்கள் திறந்து வைத்தார்.  அருமையான அந்தத் தலைமைச் செயலகத்தை அரசியல் காழ்ப்புணர்வால் மருத்துவமனையாக மாற்றினாலும், கோபுரமாய் உயர்ந்து நிற்கும் அந்தக் கட்டடத்தில் கலசமாக என்றென்றும் ஒளிர்வது தலைவர் கலைஞரின் புகழ்தான். அதனால், அண்ணாசலையில் அமைந்துள்ள அந்த வளாகத்தில், பொதுமக்கள் பார்க்கும் வகையில் தலைவர் கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலை அமைய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து, அதற்குரிய இடத்தைத் தேர்வு செய்து கொடுத்தேன்.தலைவர் கலைஞர் அவர்கள் எப்படி ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டபோது ஒவ்வொரு செங்கல்லையும் பார்த்துப் பார்த்து கட்டச் செய்தாரோ, அதுபோலவே அந்த வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் சிலையினை அமைக்கும் பொறுப்பினைக் கொண்ட பொதுப் பணித்துறைக்கு அமைச்சரான மாண்புமிகு எ.வ.வேலு அவர்கள், மிகக் குறைவான கால இடைவெளியில் சிலையை அமைக்கவேண்டிய தேவை கருதி, இமைப்பொழுதும் சோர்வடையாமல், தானே முன்னின்று ஒவ்வொரு பணியையும் சிறப்பாக மேற்கொண்டார். தலைவர் கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலையை உயிரேட்டமாக வடிவமைத்த திராவிடச் சிற்பி தீனதயாளன் அவர்களின் அரும்பணியும் பாராட்டுக்கும் நன்றிக்கும் உரியதாகும். 

கருணாநிதி நூற்றாண்டு விழா

ஜூன் 3, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 99-ஆவது பிறந்தநாள். அன்றைய தினம் தமிழகமெங்கும் எழுச்சியோடும் ஏற்றத்தோடும் அவரது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட வேண்டும் என்று நேற்று காலையில் (மே 28) நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள்/பொறுப்பாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எளிய மக்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா, கழகத்தின் இருவண்ணக் கொடி ஏற்றும் விழாக்கள் ஆகியவை மாவட்ட அளவில் தொடங்கி கிளைகள் தோறும் நடத்தப்பட வேண்டும். ஒரு நாளோடு முடிந்துவிடுவதில்லை நம் உயிர்நிகர்  தலைவர் கலைஞர் அவர்களிள் பிறந்தநாள். அவர் நிறைவேற்றிய சிறந்த திட்டங்களையும், அவர் கற்றுத் தந்த ஆட்சிக்கான இலக்கணத்தின்படி தொடர்கின்ற 'திராவிடல் மாடல்' அரசின் கடந்த ஓராண்டு கால சாதனைகளையும் மக்களிடம் ஒவ்வொரு நாளும் எடுத்துச் சென்றிட வேண்டும். கழகத்தின் இளைய தலைமுறையினரின் நெஞ்சில் அவற்றை பதியச் செய்திட வேண்டும்.  அடுத்த ஆண்டு (2023) ஜூன் 3-ஆம் நாள் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரின் நூற்றாண்டு தொடக்க விழா. அதற்கு முன்னதாக, தலைவர் கலைஞரின் 99-ஆவது பிறந்த ஆண்டில் கழகத்தின் சார்பில் இளைஞரணி, மாணவரணி, மகளிரணி, தகவல்தொழில்நுட்ப அணி உள்ளிட்ட துணை அமைப்புகளைக் கொண்டு தமிழ்நாடு முழுவதும் ‘திராவிட மாடல் பயிற்சிப் பாசறைக் கூட்டங்கள்’ நடத்தப்பட வேண்டும் என்கிற தீர்மானமும் மாவட்டக் கழகச் செயலாளர்கள்  மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அமைதி தவழும் சமூகநீதி நிலமான தமிழ்நாட்டில் மதவெறி அரசியலுக்குத் துளியும் இடம் கொடுக்காத வகையில், சுயமரியாதை உணர்வையும் சமத்துவச் சிந்தனையையும்  மேலும் மேலும் வளர்த்தெடுக்கும் விதத்தில் பயிற்சிப் பாசறைக் கூட்டங்கள் அமைந்திட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.


 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Savukku Shankar: ஸ்பா, பார் முதல் கூலிப்படை வரை! லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் அருண் மீது சவுக்கு சங்கர் பகீர் புகார்கள்!
CM Vijay Government : எப்படி இருக்கு CM Vijay-யின் ஒரு மாதகால ஆட்சி? பாஸ் ஆயிட்டாரா?