
ஓணம் பண்டிகை கொண்டாட்டம்
மலையாள மொழி பேசும் மக்களால் ஓணம் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, கோவை உள்ளிட்ட பகுதிகளிலும் கோலாகலமாக ஓணம் கொண்டாடப்படுகிறது. தமிழ் புத்தாண்டின் முதல் மாதமாக சித்திரை மாதம் கொண்டாடப்படுவது போலவே, கேரளாவில் சிங்கம் என்ற பெயரில் ஆவணி மாதம்தான், மலையாள ஆண்டின் முதல் மாதமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் மாவலி மன்னனை வரவேற்கும் விதமாக ஓணம் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இந்த 10 நாட்களிலும் 10 வகை பூக்களை வைத்தும் அத்தப்பூ கோலம் போட்டும் பெண்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள்.
புத்தாடை உடுத்தி கொண்டாட்டம்
கடந்த வாரம் முதலே ஓணம் பண்டிகை தொடங்கியதில் இருந்தே பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் பணிபுரியும் இடங்கள் என பாரம்பரிய முறைப்படி கேரளா உடை அணிந்தும், கோலங்கள் வரைந்தும் ஓணம் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வந்தனர். முக்கிய நாளான திருவோண தினமான இன்று மக்கள் அதிகாலையிலேயே நீராடி புத்தாடை உடுத்தி திருக்கோவிலில் தங்களது பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். ஓணம் பண்டிகை கேரளாவில் மட்டுமின்றி, மலையாள மக்கள் வசிக்கும் பல்வேறு மாநிலங்களிலும், நாடுகளிலும் கூட வெகு விமரிசையாக கொண்டாடப்படுகின்றன. அந்தவகையில் தமிழகத்தில் கன்னியாகுமரி, கோவை, திருப்பூர், நீலகிரி, சென்னை ஆகிய பகுதிகளில் கோலாகலமாகக் கொண்டாடப்படும். இதனையொட்டி தமிழக அரசு சார்பாக இந்த மாவட்டங்களில் அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது.
மலையாளத்தில் வாழ்த்து தெரிவித்த ஸ்டாலின்
இந்த நிலையில் ஓணம் பண்டிகையையொட்டி பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலையாளத்தில் வாழ்த்து தெரிவித்து வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், திராவிட பண்பாட்டுடன் இரண்டறக் கலந்துள்ள ஓணத்தை ஒரு தரப்பினர் ‘வாமன ஜெயந்தி’ என கூறி அடையாளத்தை பறிக்க முயல்வதாக கூறியுள்ளார். மக்களைப் பிளவுபடுத்தி, குளிர்காய நினைக்கும் சுயநல வஞ்சகர்கள் வீழும் ஓணமாக வரும் ஓணம் அமையும் என்றும் தெரிவித்துள்ளார். தென்னாட்டு மக்கள் காட்டிய முற்போக்கு அரசியல் பாதையில் ஒட்டுமொத்த இந்தியாவும் பயணிக்கும் ஆண்டாக வருகிற ஆண்டு திகழட்டும் என தனது வாழ்த்து செய்தியில் முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதையும் படியுங்கள்
Onam 2023: ஓணம் பண்டிகைக்கு பெண்கள் ஏன் வெள்ளை புடவை அணிகின்றனர்? அதன் முக்கியத்துவம் என்ன?