தமிழ்நாட்டிற்கும், தேசத்திற்கும் பெருமை சேர்த்த விஞ்ஞானிகள் 9 பேருக்கு தலா 25 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
விஞ்ஞானிகளுக்கு பாராட்டு விழா
உயர்கல்வித் துறை சார்பில் நடைபெறும் “ஒளிரும் தமிழ்நாடு - மிளிரும் தமிழர்கள் “ சாதனை படைத்த தமிழ்நாட்டு விண்வெளி விஞ்ஞானிகளுக்கான பாராட்டு விழா சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலக கலையரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் இஸ்ரோவில் பணியாற்றி ஓய்வு பெற்ற சிவன், மயில்சாமி அண்ணாதுரை மற்றும் சந்திரயான் திட்ட இயக்குனர் வீர, ஆதித்யா திட்ட இயக்குனர் நிகர்ஷாஜி உள்ளிட்ட விஞ்ஞானிகள் கலந்து கொண்டனர்.
தமிழனாக பிறந்த பெருமை
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின் பேசுகையில், தமிழனாக பிறந்த பெருமையை அதிகம் உணர்கிறேன் என்றும்
பாரதி இப்போது இருந்து இருந்தால் இஸ்ரோ சிவனும், மயில்சாமியும் பிறந்த தமிழ்நாடு என பாராட்டி இருப்பார் எனத் தெரிவித்தார். ஆக 23 ம் நாள் உலகத்திற்கே முக்கியமான நாள் நிலாவில் இந்தியா இறங்கிய நாள், சந்திராயன் லேண்டர் நிலவில் வெற்றிகாரமாக இறங்கிய நாள் என தெரிவித்த அவர், 2008 ல் துவங்கிய நிலவை நோக்கிய பயணம் 23 ல் வெற்றி பெற்று உள்ளது. நிலவை தொட்ட 4 வது நாடு இந்தியா என்ற உச்சத்தை அடைந்த்தாக தெரிவித்தார்.
25 லட்சம் ரூபாய் பரிசு தொகை
தமிழக விஞ்ஞானிகள் 9 பேரில் 6 பேர் அரசு பள்ளியில் படித்தவர்கள். முதல் தலைமுறை பட்டதாரிகள் அதிலும் குறிப்பாக 2 பேர் பெண்கள் இந்த மேடையே சமூக நீதிக்கான அடையாளமாக உள்ளது. தமிழ்நாட்டிற்கு மிகப்பெரும் பெருமை. இந்த பெருமையை தமிழ்நாடு அரசு போற்றும் வகையில், இரண்டு அறிவிப்பை வெளியிடுவதாக தெரிவித்தார். முதல் அறிவிப்பு இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமையை ஏற்படுத்திக் கொடுத்த, இனியும் ஏற்படுத்திக் கொடுக்கப் போகின்ற அறிவியல் மேதைகளான இந்த ஒன்பது பேருக்கும் தமிழ்நாடு அரசின் சார்பில்,
ஒவ்வொருவருக்கும் தலா 25 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்பதை பெருமகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் அறிவுக்கான அளவுகோல் எதுவுமில்லை. உங்கள் உழைப்பிற்கான அங்கீகாரத்தின் அடையாளமாகதான் தமிழ்நாடு அரசு இந்தத் தொகையை வழங்கியிருக்கிறது. இதை ஏற்றுக்கொண்டு, மேலும், மேலும் இந்தியாவிற்கு நீங்கள் பெருமை சேர்க்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்
மாணவர்களுக்கு உதவி தொகை
இரண்டாவது அறிவிப்பு என்னோட கனவுத் திட்டமான 'நான் முதல்வன்' திட்டத்தை பற்றி உங்களுக்குத் தெரியும். தமிழ்நாட்டு மாணவர்கள் இளைஞர்கள் ஏதோ பட்டம் வாங்கினால் மட்டும் போதும் என்று நினைக்காமல் கல்வியில் அறிவாற்றலில் சிந்திக்கின்ற திறனில் பன்முகத் திறமையில் சிறந்தவர்களாக அப்படி உருவாக்கத்தான் நான் முதல்வன் திட்டத்தை தொடங்கி நடத்திக்கொண்டு வருகிறோம். சென்ற ஆண்டு மட்டும் 13 லட்சம் பேருக்கு பயிற்சி வழங்கி இருக்கிறோம். 10 இலட்சம் என்று இலக்கு வைத்திருந்தோம். ஆனால் 13 இலட்சம் பேருக்கு பயிற்சி வழங்கியிருக்கிறோம். நம்முடைய மாணவர்களை அனைத்து திறமைகளும் கொண்டவர்களாக வளர்த்து வருகிறோம்.
பன்னாட்டு நிறுவனங்கள் அதிக அளவில் தமிழ்நாட்டிற்கு தொழில் தொடங்க வருகிறார்கள். அதற்குத் தகுதியானவர்களாக தமிழ்நாட்டு இளைஞர்களை உருவாக்கி வருகிறோம். அதேபோல அறிவியல் திறனுள்ள மாணவர்களையும் உருவாக்க நினைக்கிறோம். அதற்கான அறிவிப்பை இந்த மேடையில் வெளியிடுவது மிகமிக பொருத்தமாக அமையும் என்று நான் கருதுகிறேன். பொறியியல் படிக்கின்ற மாணவர்களுக்கு அறிவியல் கண்டுபிடிப்பு ஆர்வத்தை உருவாக்க இந்த திட்டத்தை செயல்படுத்தப் போகிறோம். அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும்.
7.5 விழுக்காடு ஒதுக்கீட்டின் கீழ், அரசின் கல்வி உதவித்தொகை பெற்று இளநிலை பொறியியல் படிப்பை முடித்து, முதுநிலை பொறியியல் படிப்பை தொடர்கின்ற 9 மாணவர்களுக்கு சாதனை விஞ்ஞானிகள் பெயரில் ஸ்காலர்ஷிப் வழங்க இருக்கிறோம். இதன் மூலம் அவர்களுக்கு கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம் உள்ளிட்ட அனைத்து கட்டணங்களும் வழங்கப்படும். அந்த மாணவர்கள், அறிவியலாளர்களின் தலைமையில் அமைக்கப்படுகின்ற குழுக்களால் தேர்வு செய்யப்படுவார்கள். இந்தக் கல்வி உதவித்தொகைக்காக, பத்து கோடி ரூபாயில் தொகுப்பு நிதியம் ஒன்று உருவாக்கப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
இதையும் படியுங்கள்