School : உயிரை கொடுத்து பள்ளி குழந்தைகளை காப்பாற்றிய ஓட்டுநர்.! நிதி உதவி அறிவித்த ஸ்டாலின்-எவ்வளவு தெரியுமா.?

By Ajmal Khan  |  First Published Jul 26, 2024, 7:19 AM IST

தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருந்த நிலையிலும் தன் பொறுப்பிலிருந்த பள்ளிக் குழந்தைகளின் விலைமதிப்பில்லாத உயிர்களை காப்பாற்றி பின்னர் தனது இன்னுயிரை இழந்த சேமலையப்பனின் கடமை உணர்ச்சியையும் தியாக உள்ளத்தையும் நாம் தலைவணங்கி போற்றுகிறோம் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
 


திடீர் மாரடைப்பு- பள்ளி குழந்தைகளை காப்பாற்றிய ஓட்டுநர்

திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழக்கும் நேரத்திலும், பள்ளி குழந்தைகளுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக சாலை ஓரத்தில் வாகனைத்தை நிறுத்திய பின் ஓட்டுநர் மரணம் அடைந்த சம்பவம் பொதுமக்கள் வேதனையில் ஆழ்த்தியுள்ளது.  திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்த வெள்ளக்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் மலையப்பன் (வயது 49). இவர் தனியார் மெட்ரிக் பள்ளியில் பள்ளி வாகனத்தை இயக்கும் பணி செய்து வருகிறார்.

Tap to resize

Latest Videos

நேற்று முன்தினம்  மாலை வழக்கம் போல் பள்ளி முடிந்து மாணவர்களை வீட்டில் விடுவதற்காக வேனில் அழைத்து வந்துள்ளார். அதே வேனில் குழந்தைகளுக்கு வழிகாட்டியாக மலையப்பனின் மனைவியும் இருந்துள்ளார். அப்போது திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலியால் சுதாரிப்பு இல்லாத நிலையிலும் வாகனத்தை ஓரமாக நிறுத்தியுள்ளார். அடுத்த ஒரு சில மணித்துளிகளில் ஸ்டேரிங் மீதே மயங்கி விழுந்துள்ளார்.

முதலமைச்சர் இரங்கல்

இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் ஓட்டுநரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களை வேதனையில் ஆழ்த்தியது. ஓட்டுநர் மலையப்பன் மறைவிற்கு தமிழகம் முழுவதும் உள்ள மக்கள் இரங்கல் தெரிவித்தனர். இந்தநிலையில்   தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவிலில் உள்ள தனியார் பள்ளியில் வாகன ஓட்டுநராக பணிபுரிந்து வந்த காங்கேயம், சத்யா நகரைச் சேர்ந்த பள்ளிக் குழந்தைகளை அழைத்துக்கொண்டு கோவை -திருச்சி நெடுஞ்சாலை வெள்ளக்கோவில் பழைய காவலர் குடியிருப்பு அருகே வந்துகொண்டிருந்தபோது தனக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் உடனடியாக தான் ஒட்டிவந்த பள்ளி வாகனத்தில் இருந்த பள்ளிக் குழந்தைகளுக்கு எந்த ஆபத்தும் ஏற்படாத வகையில் பத்திரமாக நிறுத்தி பின்னர் உயிர் நீத்தார் என்ற செய்தியைக் கேட்டு மிகவும் வருத்தமும், வேதனையும் அடைந்தேன்.

நிதி உதவி அறிவிப்பு

தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருந்த நிலையிலும் தன் பொறுப்பிலிருந்த பள்ளிக் குழந்தைகளின் விலைமதிப்பில்லாத உயிர்களை காப்பாற்றி பின்னர் தனது இன்னுயிரை இழந்த சேமலையப்பன் அவர்களின் கடமை உணர்ச்சியையும் தியாக உள்ளத்தையும் நாம் தலைவணங்கி போற்றுகிறோம். காலம் சென்ற பள்ளி வாகன ஒட்டுநர் சேமலையப்பன் அவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்த சேமலையப்பன்  குடும்பத்தினருக்கு ரூபாய் ஐந்து இலட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளதாக கூறியுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

உயிர் பிரியும் தருவாயிலும் 20 குழந்தைகளின் உயிரை பத்திரமாக காப்பாற்றிய தனியார் பள்ளி ஓட்டுநர்

click me!