சென்னை வந்த பிரதமர் மோடியை விமான நிலையத்தில் ஆளுநர் ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் வரவேற்றனர். இதனையடுத்து பிரதமர் நரேந்திர மோடி சென்னை விமான நிலையத்தில் ரூ.1260 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட ஒருங்கிணைந்த முனையத்தை திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார்.
சென்னை வந்தார் மோடி
தமிழகத்திற்கு இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று சென்னை வந்தார். முன்னதாக ஐதரபாத் வந்தடைந்த மோடி செகந்திரபாத்- திருப்பதி இடையேயான வந்தே பாரத் ரயில் திட்டத்தை தொடங்கிவைத்தார். இதனையடுத்து ஐதராபாத்திலிருந்து இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானம் மூலம் இன்று மதியம் 1.35 மணிக்கு புறப்பட்டு சென்னை விமான நிலையத்துக்கு மதியம் 2.45 மணியளவில் வந்தடைந்தார்.
அவரை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதலம்மைச்சர் ஓ.பன்னீர் செல்வம், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை உள்பட கூட்டணி கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் வரவேற்றனர். இதைத்தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி கார் மூலமாக புதிய விமான நிலைய முனையத்திற்கு சென்றார். அப்போது செல்லும் வழியில் கூடியிருந்த பொதுமக்களுக்கு கை அசைத்து மோடி வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் ரூ.1260 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட ஒருங்கிணைந்த முனையத்தை திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார்.
சென்னை விமான நிலைய புதிய முனையம் திறப்பு
சென்னை விமான நிலையத்தில் புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்டிடம், 2,20,972 சதுர மீட்டர் பரப்பளவில், தமிழ்நாடு மாநிலத்தில் வளர்ந்து வரும் விமானப் போக்குவரத்தைப் பூர்த்தி செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. விமான நிலைய பயணிகளின் அளவை வருடத்திற்கு 23 மில்லியனில் இருந்து 30 மில்லியனாக T-2 (Phase-1) முனைய கட்டிடம் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் மோடி ஹெலிகாப்டர் மூலம் நேப்பியர் பாலம் அருகே உள்ள ஐ.என்.எஸ். அடையார் ஹெலிபேட் தளத்துக்கு வந்தடைகிறார்.
அங்கிருந்து மதியம் 3.55 மணியளவில் கார் மூலம் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு புறப்படுகிறார். அப்போது அவருக்கு வழிநெடுகிலும் பா.ஜ.க.வினர் உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்துள்ளனர். அவர்களது வரவேற்பை ஏற்றபடி மாலை 4 மணியளவில் சென்ட்ரல் எம்.ஜி.ஆர். ரெயில் நிலையத்தை வந்தடைகிறார். அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் சென்னை-கோவை 'வந்தே பாரத்' எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.
இதையும் படியுங்கள்