கூட்ட நெரிசலில் சிக்கி 4 பேர் உயிரிழப்பு!.. நிவாரணம் அறிவித்தார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்

By Raghupati RFirst Published Feb 4, 2023, 7:23 PM IST
Highlights

வாணியம்பாடியில் கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்த நான்கு பெண்களின் குடும்பத்திற்கு நிவாரண உதவியை அறிவித்துள்ளார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில், தைப்பூசத்தை முன்னிட்டு தனியார் நிறுவனம் ஒன்று சார்பில் இலவச புடவைகள் வழங்குவதாக அறிவித்ததை அடுத்து பெண்கள் ஒரே இடத்தில் குவிந்தனர். இதில் ஆயிரக்கணக்கானோர் ஒரே இடத்தில் குவிந்ததால் நெரிசல் ஏற்பட்டு பெண்கள் மயக்கமடைந்தனர்.

இலவச வேட்டி, சேலைக்கான டோக்கன் பெற முயன்றபோது நெரிசலில் சிக்கி 4 பெண்கள் உயிரிழந்தனர். இந்த கூட்டத்தில் 10க்கும் மேற்பட்ட பெண்கள் கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்துள்ளனர். காயமடைந்த பெண்களை அப்பகுதியினர் மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இது தொடர்பாக வட்டாட்சியர், போலீசார் நேரில் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க..மறைந்த பிரபல பாடகி வாணி ஜெயராமின் கடைசி வீடியோ!.. ரசிகர்கள் சோகம் !!

இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி வட்டம் மற்றும் நகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் அய்யப்பன் என்பவர்  நாளை (5.2.2023) நடைபெறும் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, அங்குள்ள பொதுமக்களுக்கு வேட்டி சேலை வழங்குவதற்காக, இன்று (4.2.2023) காலை வாணியம்பாடி காய்கறி சந்தைக்கு அருகில் டோக்கன் விநியோகித்தார்.

அதை வாங்குவதற்காக ஏராளமான பொதுமக்கள் கூடியதால், அங்கு கூட்டநெரிசல் ஏற்பட்டது.  இந்த கூட்டநெரிசலில் சிக்கி (1) வள்ளியம்மாள் (வயது 60) க/பெ. சண்முகம், (2) ராஜாத்தி (வயது62) க/பெ. ஜெமினி, (3) நாகம்மாள் (வயது 60) க/பெ. சின்னத்தம்பி மற்றும் (4) மல்லிகா (வயது 70), க/பெ. மணி ஆகிய வயதான நான்கு பெண்கள் உயிரிழந்துள்ளனர்.

மேலும் மூன்று பெண்கள் காயமுற்று, மூச்சுத் திணறல் ஏற்பட்டு, வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிசிக்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்திற்குக் காரணமான அய்யப்பன் உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த துயர சம்பவத்தைக் கேள்வியுற்று, நான் மிகவும் வேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களைப் பிரிந்து வாடும் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த வயதான நான்கு பெண்களின் குடும்பத்தாருக்கு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து, தலா இரண்டு இலட்சம் ரூபாயும், கடும் காயமடைந்து, மூச்சுத் திணறல் ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மூன்று பெண்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதியுதவி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க..அந்த 8 நாட்கள்!.. இபிஎஸ் Vs ஓபிஎஸ் இணைப்பு உண்மையா.? பல்டி அடித்த அண்ணாமலை - பின்னணி என்ன.?

click me!