
சென்னை தியாகராயர் நகரில் உள்ள பிரபல துணிக்கடையான சென்னை சில்க்ஸில் கட்டடத்தில் இன்று அதிகாலை 4 மணிக்கு புகை வருவதை அறிந்த அந்நிறுவனக் காவலாளிகள் இது குறித்து தீயணைப்பு படைக்குத் தகவல் அளித்தனர். இதன் பேரில் அங்கு 11 வண்டிகளில் வந்த மீட்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடத் தொடங்கினர்.
ஆனால் கட்டிடம் முழுவதும் புகை சூழ்ந்ததால் மீட்பு பணிகள் மேற்கொள்வதில் சிக்கல் எழுந்தது. அதிகாலையில் ஏற்பட்ட இந்த சம்பவத்தால் தியாகராய நகரில் அப்போது பதற்றம் ஏற்படவில்லை. நேரம் செல்லச் செல்ல புகையின் அளவு அதிகமாகி ஜன்னல் கண்ணாடிகள் உடைந்ததால் பரபரப்பு தொற்றிக் கொண்டது.
காலை 10 மணி ஆகியும் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்படாததால் பாதுகாப்பற்ற பகுதி என அறிவிக்கப்பட்டு பொதுமக்கள் வெளியேற்றப்பட்டனர். மேலும் அருகில் உள்ள மற்ற கடைகளும் அறிவிக்கப்பட்டன.
விபத்தின் போது 7 வது தளத்தில் இருந்த 14 ஊழியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். கடையில் வைக்கப்பட்டுள்ள துணிகள் கொளுந்துவிட்டு எரிந்து கொண்டிருப்பதால், வெப்பம் தாளாமல் கட்டடத்தின் சுவர்கள் விரிசல் விடத் தொடங்கியுள்ளன. கண்ணாடி ஜன்னல்கள் உடைந்து வருவதால் உஸ்மான் நகர் பகுதி பரபரப்புடன் காணப்படுகிறது.
அசம்பாவிதங்களை தடுக்க கூடுதல் மீட்பு படையினர் அப்பகுதியில் முகாமிட்டுள்ளனர்.
தி.நகரில் முறையான அனுமதியின்றி அடுக்குமாடி கட்டிடங்கள் கட்டப்பட்டது குறித்து நீதிமன்றம் ஆணையிட்டும் நடவடிக்கை இல்லை.
கட்டடத்திற்கு இடையே இடைவெளி , தீயணைப்பு வசதிகள் , பாதுகாப்பு வசதிகள் , வாகன பார்க்கிங் எதுவும் இல்லாமல் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள்.
ஆபத்து காலத்தில் பொதுமக்கள் வெளியேற முடியாத அளவுக்கு பாதுகாப்பின்மை. பகலில் இந்த தீவிபத்து ஏற்பட்டிருந்தால் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கும் என்கிற ரீதியில் அடிக்கலாம். கட்டிடம் முழுதும் எரிந்து போனதால் பாதுகாப்பு கருதி இடிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இப்போதே முதல் தளத்தை இடித்துவிட்டுத்தான் தீயணைப்பு பணி நடக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.