
தீ விபத்து ஏற்பட்ட சென்னை சில்க்ஸ் முன்பு நின்று பிரபல ஜோதிடர் ஷெல்வி எடுத்து கொண்ட செல்பி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சென்னை திநகரில் உள்ள சென்னை சில்க்ஸ் துணிக்கடையில் தீ விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து அக்கட்டடம் இடியும் அபாயத்தில் உள்ளதாக தெரிகிறது. பிரபல துணிக்கடையான தி சென்னை சில்க்ஸில் இன்று அதிகாலை தீவிபத்து ஏற்பட்டது.
மின் கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டதாக கூறப்படும் இக்கடையில் இருந்து ஊழியர்கள் அனைவரும் உயிருடன் மீட்கப்பட்டனர். தகவலறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடம் விரைந்து தீயை அணைக்க 7 மணிநேரமாக போராடி வருகின்றனர்.
15 தீயணைப்பு வாகனங்கள் வரழைக்கப்பட்டுள்ளன. தீ கட்டுக்குள் உள்ள போதிலும் கட்டடம் முழுவதும் கரும்புகை சூழ்ந்து காணப்படுகிறது. இந்நிலையில் கடையின் கண்ணாடிகள் உடைந்து கரும்புகை வெளியேறி வருகிறது.
தீவிபத்து காரணமாக சென்னை சில்க்ஸ் அருகில் உள்ள ஸ்ரீ குமரன் தங்கமாளிகை உள்ளிட்ட கடைப் பகுதிகள் அபாயகரமான பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தீவிபத்து நடந்த இடத்தை சென்னை கலெக்டர் அன்புசெல்வன் ஆய்வு செய்துள்ளார்.
உஸ்மான் சாலையில் போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ளது. கடைக்குள் கரும்புகை சூழ்ந்துள்ளதால் கடைக்குள் உள்ள பொருள்கள் சேதமதிப்பு குறித்து தெரியவில்லை.
மேலும் தீயணைப்பு வீரர்களால் உள்ளே செல்ல முடியவில்லை. இதனிடையே கட்டடத்துக்குள் விரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. இதனால் 7 மாடிக் கட்டடம் இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கரும்புகையால் கட்டடம் பலமிழந்துள்ளதால் கட்டடத்தின் ஸ்திரத்தன்மை குறித்து ஆய்வு செய்ய அதிகாரிகள் ஆலோசனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தீ விபத்து நடந்து புகை மண்டலமாக காட்சி அளிக்கும் சென்னை சில்க்ஸ் முன்பு நின்று கொண்டு பிரபல ஜோதிடர் ஷெல்வி எடுத்துள்ள செல்பி சமூக வலைதளங்களில் வலம் வர தொடங்கியுள்ளது.
அடுத்தவன் கஷ்டத்திலும் குதூகலமா? என்ற ரீதியில் நெட்டிசன்கள் கமெண்டுகளில் வறுத்தெடுத்து வருகின்றனர்.
இறந்த பிணத்துடன் செல்பி எடுப்பதை காட்டிலும் இது ஒன்றும் பெரிய குற்றம் இல்லை என்கிறனர் செல்பி ஆர்வலர்கள்.
இதே போல சில மாதங்களுக்கு முன்பு கர்நாடகாவில் நடைபெற்ற கலவரத்தின் போது பற்றி எரியும் கட்டிடங்களின் முன்பு செல்பி எடுத்து சமூக தளங்களில் சிலர் வாங்கி கட்டி கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.