
சென்னை ஐஸ் ஹவுசில் ரியல் எஸ்டேட் தரகர் கொலை செய்யப்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்ட கள்ளக்காதலியை போலீசார் தேடி வருகின்றனர். கடன் பிரச்சனையால் தனது காதலனை விட்டு கள்ளக்காதலனை கொலை செய்ய ஏவி உள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
சென்னை ஐஸ்அவுஸ், ஜாகீர் உசேன் கான் தெருவைச் சேர்ந்தவர் ஹனீப். கார் டிரைவரான இவர், ரியல் எஸ்டேட் தரகர் தொழிலும் செய்து வந்தார். இவருக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.
ஹனீப் நேற்று பிற்பகல் 2 மணிக்கு ஐஸ்-அவுஸ் பெசன்ட் சாலையில் பைக்கில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது திடீரென்று அங்கு வந்த 4 மர்ம நபர்கள், ஹனீப்பை வழிமறித்து கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு தப்பி சென்றனர்.
அங்கிருந்த அக்கம்பக்கத்தினர் ஹனீப்பை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே ஹனீப் உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் சம்பவ இடத்திற்கு அருகில் பொருத்தபட்டிருந்த வீடியோ கட்சியை வைத்து போலீசார் துப்பு துலக்கினர்.
இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், ஹனீப்பை குத்தியது அதே பகுதியை சேர்ந்த சித்திக் என்பது தெரியவந்தது. அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
கொலை செய்யப்பட்ட ஹனிப் மனைவி இருக்கும்போதே ஐஸ் ஹவுஸ் பகுதியை சேர்ந்த நிஷா என்ற பெண்ணுடன் கள்ளக்காதல் வைத்துள்ளார். மேலும், நிஷாவிற்கு லட்சக்கணக்கில் பணமும் கொடுத்து வந்துள்ளார்.
இதனால் ஹனீப்புக்கும் நிஷாவிற்கும் கருத்து வேறுபாடு நிலவியதாக தெரிகிறது. இதனால் தான் கொடுத்த பணத்தையும் திருப்பித் தருமாறு நிஷாவை ஹனீப் வலியுறுத்தி வந்துள்ளார்.
ஆத்திரமடைந்த பெண் தன் காதலன் சித்திக்குடன் சேர்ந்து ஹனீப்பை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.
இதையடுத்து கொலை செய்த சித்திக்கையும், கொலைக்கு உதவிய அவரது நண்பர் கலிபுல்லாவும் போலீசார் கைது செய்துள்ளனர்.
கொலைக்கு காரணமாக இருந்த ஹனீப்பின் கள்ளக்காதலி நிஷாவை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.