
தீ விபத்தில் பாதிக்கப்பட்ட சென்னை சில்க்ஸ் கட்டத்தை இடிப்பது குறித்து ஆய்வு செய்ய பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் ஜெய்சிங் தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
சென்னை தியாகராயநகர் சென்னை சில்க்ஸ் துணிக்கடையில் நேற்று அதிகாலை ஏற்பட்ட தீவிபத்தில் அந்த கடை முழுவதும் முற்றிலும் எரிந்து நாசமானது.
நேற்று காலை பிடித்த தீயை இன்னும் அணைக்க முடியாமல் தீயணைப்புத் துறையினர் திணறி வருகின்றனர். தற்போது தீ ஓரளவுக்கு கட்டுப்பாட்டுக்குள் இருந்தாலும் இன்னும் தரைத்தளத்தில் தீ எரிந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் தீயணைக்கும் பணியை பார்வையிட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தி.நகர், உஸ்மான் சாலை பகுதி முழுவதும் போலீஸ் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதால் உயிர் சேதம் தடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
தீ முழுமையாக அணைக்கபட்ட பின் அருகில் உள்ள கட்டடங்களுக்கு எந்த சேதமும் இல்லாமல் சென்னை சில்க்ஸ் கட்டடத்தை இடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்காக ஆய்வு செய்ய பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் ஜெய்சிங் தலைமையில் 5 பேர் கொண்டு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இன்று காலை முதல் ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அமைச்சர்கள், அதிகாரிகள் மேற்பார்வையில் தீயணைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் கூறினார்.