சென்னையில் தண்ணீர் லாரி மோதி விபத்து... சிறுமி உயிரிழப்பு

By vinoth kumarFirst Published Dec 6, 2018, 4:21 PM IST
Highlights

சென்னையில் தண்ணீர் லாரி மோதிய விபத்தில் பள்ளி மாணவி உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னையில் தண்ணீர் லாரி மோதிய விபத்தில் பள்ளி மாணவி உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநரை போலீசார் கைது செய்துள்ளனர்.  

கேரளாவைச் சேர்ந்தவர் லிஜோ. இவரது மனைவி ஜினினா மற்றும் மகள் ஜெமீமா அச்சு மேத்யூ கீழ்பாக்கத்தில் உள்ள மண்டபம் சாலையில் வசித்து வருகின்றனர். ஜினினாவின் கணவர் கேரளாவில் வேலை செய்து வருகிறார். இவரது மகள் ஜெமீமா அச்சு மேத்யூ (13) சேத்துப்பட்டில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். 

இன்று காலை தனது மாமாவுடன் ஜெமீமா இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு சென்றார். அப்போது ஜீனுவின் மகள் கிஷியாவும் உடன் சென்றார். அப்போது கீழ்ப்பாக்கம் நியூ ஆவடி சாலை தாமோதரன் தெரு சந்திப்பில் செல்லும் போது திடீரென எதிர்பாராத விதமாக பின்னால் வந்த தண்ணீர் லாரி பைக்கில் மோதியது. இதில் நிலை தடுமாறி மாணவி ஜெமீமா கீழே விழுந்தார். அப்போது லாரியின் டயர் அவர் மீது ஏறியதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். 

தகவல் அறிந்து வந்த கீழ்ப்பாக்கம் போலீசார் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து தண்ணீர் லாரி ஓட்டுநர் கோவிந்தராஜை போலீசார் கைது செய்துள்ளனர். விபத்து தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 

சென்னையில் குறுகிய சாலை மற்றும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில் கூட தண்ணீர் லாரிகள் அதிவேகத்தில் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். அதேபோல் பள்ளி நேரத்தில் கூட வேமாக செல்வதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தண்ணீர் லாரி வேகமாக செல்வதை போக்குவரத்து போலீசார் தடுத்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

click me!