சென்னையை மீண்டும் குளிர வைத்த அதிகாலை மழை… அடுத்த 2 நாட்களுக்கு இந்த 15 மாவட்டங்களில் கனஜோர் மழை பெய்யுமாம் !!

By Selvanayagam PFirst Published Sep 25, 2019, 8:31 AM IST
Highlights

சென்னையில் பல்வேறு இடங்களில் இன்று காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் சென்னை இன்று மீண்டும் குளிர் நகரமாக மாறியுள்ளது. மழை நீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டாலும் அதிகாலை மழையை சென்னை மக்கள் உற்சாகத்துடன் வரவேற்றுள்ளனர்.

தென்மேற்கு பருவமழை தொடங்கியதில் இருந்து மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. தமிழகத்தில் வெப்பசலனம் காரணமாகவும், வங்கக்கடலில் அவ்வப்போது நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவும் மழை பெய்து கொண்டு இருக்கிறது.

இந்தநிலையில் இன்று சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை போன்ற முக்கிய மாவட்டங்கள் உட்பட 15 மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இதேபோன்று மதுரை, தேனி உட்பட 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.  நடப்பு பருவத்தில் 15 விழுக்காடு கூடுதல் மழை பொழிவை தமிழகம் பெற்றுள்ளது என தெரிவித்திருந்தது.  அதிவேக காற்று வீச வாய்ப்பு இருப்பதால் குமரி கடல் பகுதி, மாலத்தீவு மற்றும் தென் தமிழக கரையோர பகுதிகளுக்கு மீனவர்கள் இன்று செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டது.


இந்த நிலையில் நள்ளிரவு முதல் இன்று அதிகாலை வரை சென்னையின் பல இடங்களில் மழை கொட்டி தீர்த்து வருகிறது. சென்னையில் கிண்டி, மாம்பலம், அசோக்நகர், மடிப்பாக்கம், வேளச்சேரி, எழும்பூர், வேப்பேரி, அரும்பாக்கம், புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

இதேபோன்று வடபழனி, கோயம்பேடு, சூளைமேடு, அண்ணாசாலை, கே.கே. நகர், ராமாபுரம், போரூர், பூந்தமல்லி, கோடம்பாக்கம், வளசரவாக்கம் மற்றும் அண்ணாநகர் ஆகிய பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. இதனால் அதிகாலையில் அலுவலகம் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்பட்டது. 

தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மிதமான மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு தொடர்ந்து மழை பெய்துவருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

click me!