கருக்கா வினோத் ஜாமீனை ரத்து செய்ய கோரி காவல்துறை மனுத்தாக்கல்!

By Manikanda Prabu  |  First Published Oct 31, 2023, 5:13 PM IST

கருக்கா வினோத் ஜாமீனை ரத்து செய்ய கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் காவல்துறை மனுத்தாக்கல் செய்துள்ளது


சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை நுழைவு வாயில் முன்பாக குண்டு வீச்சில் ஈடுபட்ட ரவுடி கருக்கா வினோத்தை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, ஆளுநர் மாளிகை, பாஜகவினர் தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர். பெட்ரோல் குண்டு வீச்சு வழக்கை நீர்த்துப் போக செய்ய காவல்துறை முயற்சிப்பதாக ஆளுநர் மாளிகையும் குற்றம் சாட்டியுள்ளது.

அதேசமயம், இந்த வழக்கில் தொடக்கம் முதல் கருக்கா வினோத் கைது செய்யப்பட்டது வரை என்ன நடந்தது என்பதை வீடியோ ஆதாரத்துடன் தமிழக காவல்துறை வெளியிட்டு, ஆளுநர் மாளிகை உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகளை கூறுவதாக பதிலடி கொடுத்துள்ளது.

Tap to resize

Latest Videos

இதனிடையே, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட கருக்கா வினோத்தை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது. அதன்படி, அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், நீட் தேர்வு இருந்தால் தன் மகனின் மருத்துவ கனவு பறிபோகும் என்பதால் ஆளுநர் மாளிகை முன்பு  பெட்ரோல் குண்டு வீசியதாக வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதற்கு முன்பு முதற்கட்ட விசாரணையின்போது, ஓராண்டாக சிறையில் இருந்த தன்னை விடுதலை செய்ய ஆளுநர் ஒப்புதல் அளிக்காத காரணத்தால், ஆத்திரத்தில் ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசியதாக அவர் வாக்குமூலம் அளித்ததாக தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில், கருக்கா வினோத் ஜாமீனை ரத்து செய்ய கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் காவல்துறை மனுத்தாக்கல் செய்துள்ளது. பாஜக அலுவலகம் மீதான பெட்ரோல் குண்டு தாக்குதல் வழக்கில் ரவுடி கருக்கா வினோத்திற்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்யக்கோரி காவல்துறை மனு தாக்கல் செய்துள்ளது. அதில், ஜாமின் பெற்ற கருக்கா வினோத், ஆளுநர் மாளிகை அருகே பெட்ரோல் குண்டு வீசியுள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக நவம்பர் 15ஆம் தேதிக்குள் கருக்கா வினோத் பதிலளிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வட கிழக்கு பருவமழை 43 சதவீதம் குறைவு: சென்னை வானிலை ஆய்வு மையம்!

முன்னதாக, கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 10ஆம் தேதி, சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கைது செய்யப்பட்டவர்தான் இந்த கருக்கா வினோத். அந்த வழக்கில் ஓராண்டுக்கும் மேலாக சிறையில் இருந்த அவர், கடந்த வாரம்தான் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார். அதன் தொடர்ச்சியாக, சிறையில் இருந்து வெளியே  வர ஆளுநர் ஒப்புதல் அளிக்காததால் தற்போது ஆளுநர் மாளிகை மீது மீண்டும் பெட்ரோல் குண்டு வீசி கைதாகியுள்ளார்.

பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசி கைதான கருக்கா வினோத்தை ஜாமீனில் எடுத்த வழக்கறிஞர் திருவாரூர் மாவட்ட பாஜகவின் வழக்கறிஞர் பிரிவு செயலாளர் முத்தமிழ் செல்வகுமார் என திமுக தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதியும் பேசியுள்ளார்.

click me!