யானைகள் மரணங்கள் : கேள்விகளால் துளைந்த நீதிபதிகள்.. பதிலளிக்குமா மத்திய அரசு..?

By Thanalakshmi VFirst Published Dec 10, 2021, 10:19 PM IST
Highlights

இரயில் மோதி யானைகள் உயிரிழக்கும் சம்பவங்களை தடுப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை விரிவான அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்ட உயர் நீதிமன்றம், இதனை தீவிரமாக கண்காணிக்கப் போவதாக மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
 

தமிழகத்தில் யானைகளின் எண்ணிக்கை வேகமாக குறைந்து வருவதாகவும் கொடூரமாக வேட்டையாடப்படுவதாகவும், தேசிய வனவிலங்கு குற்றத் தடுப்புப் பிரிவுடன், சி.பி.ஐ இணைந்து யானை வேட்டை தொடர்பான வழக்குகளை விசாரிக்க உத்தரவிடக் கோரிய மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம், தமிழகத்தில் யானை இறப்பு தொடர்பான அனைத்து வழக்குகளையும் சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்குகள் நீதிபதிகள் பாரதிதாசன் மற்றும் சதீஷ்குமார் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. 

வழக்கு விசாரணையின் போது, கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் 13 ஆயிரம் விலங்குகள் கொல்லப்பட்டுள்ளதாக மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் அசாம், பீகார், கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட 6 மாநிலங்களில் தான் யானைகள் அதிக அளவில் உள்ளதாகவும், இரயிலில் அடிபட்டு யானைகள் உயிரிழக்கும் செய்திகள் சமீபத்தில் அதிகளவு வருகின்றன எனவும் குறிப்பிட்டனர். மேலும் இந்தியாவில் வாழும் மொத்த யானைகளின் எண்ணிக்கையில் தற்போது  பெரும்பாலும் குறைந்து அழிந்து வருவதாகவும் வேதனை தெரிவித்தனர். கடந்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவில் 61 யானைகளும் இரயிலில் அடிபட்டு இறந்துள்ளது என்று மத்திய தணிக்கை துறை தெரிவித்துள்ளதாக வழக்கறிஞர் சுட்டிக்காட்டினார்.

இதையடுத்து, யானைகள் இறப்பு தொடர்பாக குழுக்கள் அமைத்து பரிந்துரைகள் மட்டும் பெறப்படுவதாகவும், அந்த பரிந்துரைகள் காகித அளவில் மட்டும் உள்ளதாகவும் தெரிவித்த நீதிபதிகள், யானைகள் இறப்பு குறித்து யாரும் கவலை படுவதில்லை என்று அதிருப்தி தெரிவித்தனர். இரயில் மோதி யானைகள் இறக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும், சம்பந்தப்பட்ட இரயில் ஓட்டுநர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என்றும் தெரிவித்த நீதிபதிகள், யானை வழித்தடங்களில் இரயில்களை மெதுவாக இயக்கினால் என்ன என்று கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் அளித்த மத்திய அரசு வழக்கறிஞர், யானைகள் வழித்தடங்களில் 45 கிலோ மீட்டர் வேகத்தில் தான் ரயில் இயக்கப்படுகிறது என்றும், 5 கிலோ மீட்டர் வேகத்தில் ரயில்களை இயக்கினாலும் யானை மீது மோதினால் அவை இறக்கத்தான் செய்யும் என்றும், இது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்வதாகவும் தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்க உள்ளதாக எச்சரித்த நீதிபதிகள், இரயில்வே சொத்துக்களை பாதுகாக்க தடுப்பு சுவர்களை எழுப்புவதால், யானைகள் வேறு வழியில்லாமல் தண்டவாளங்களை கடக்கும் சூழல் ஏற்படுவதாகவும், யானை இழப்பைத் தடுக்க எவ்வளவு பணம் செலவழித்தாலும் அதற்கான தீர்வு கிடைக்கவில்லை என்றும் தெரிவித்த நீதிபதிகள், இரயில் மோதி யானைகள் பலியாவதை தடுக்க எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கும், தெற்கு ரயில்வேக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜனவரி 21ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்

click me!