தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை..மேற்கொண்ட திருத்தங்கள் செல்லும்..அதிரடி காட்டிய நீதிமன்றம்

By Thanalakshmi VFirst Published Jan 21, 2022, 7:41 PM IST
Highlights

மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய பாடலில், மறைந்த முதல்வர் கருணாநிதி திருத்தங்கள் செய்து தமிழ்த்தாய் வாழ்த்து பாடலாக அறிவித்ததை எதிர்த்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

நீராரும் கடலுடுத்த எனத் தொடங்கும் மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய பாடலின் இரண்டாவது பத்தியில், கன்னடம், தெலுங்கு, மலையாளம், துலு, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளை குறிப்பிடும் வரிகளை நீக்கி, கடந்த 1970ஆம் ஆண்டு முதல்வராக இருந்த மு.கருணாநிதி தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக அறிவித்தார். அதன்படி, அப்போது முதல் அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டு வருகிறது. மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய முழுமையான பாடலை திருத்தியதை எதிர்த்து ஜெபமணி ஜனதா கட்சியின் பொது செயலாளரான ஜெ.மோகன்ராஜ் உயர் நீதிமன்றத்தில் 2007ல் வழக்கு தொடர்ந்தார்.

அவரது மனுவில் சமஸ்கிருதம்போல் அல்லாமல் இளமையாக தமிழ் மொழி இருப்பதை குறிப்பிடும் வகையிலும், பிற திராவிட மொழிகளை ஒப்பிட்டும் கூறப்பட்ட வரிகளை நீக்கியது மனோன்மனியம் சுந்தரனாரருக்கு அவமதிப்பை ஏற்படுத்தும் செயல் என்றும் குறிப்பிட்டுள்ளார். எனவே திருத்தப்பட்ட பாடலை தமிழ் பாடப்புத்தங்களில் இடம்பெற செய்துள்ளதையும், விழாக்களில் பாடுவதையும் சட்டவிரோதமானது என அறிவிக்க வேண்டுமென கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, அரசு பிளீடர் பி.முத்துக்குமார் ஆஜராகி தமிழ்த்தாய் வாழ்த்தை மாற்றி அமைக்க அரசுக்கு உரிமை உள்ளதாகவும், பாடலுக்கான காப்புரிமையை மனுதாரர் பெற்றிருக்கவில்லை என்றும் தெரிவித்ததுடன், வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டுமென கோரிக்கை வைத்தார். இதையடுத்து 1970ல் திருத்தம் செய்யப்பட்டு தொடர்ந்து பாடப்பட்டு வந்த நிலையில், 37 ஆண்டுகள் கழித்து வழக்கு தொடர்ந்ததை ஏற்க முடியாது எனக் கூறிய நீதிபதிகள், ஜெபமணி மோகன்ராஜின் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

click me!