மதம்மாற வற்புறுத்தினாரா வார்டன்? மரண வாக்குமூலத்தில் தஞ்சை மாணவி சொல்வது என்ன?

By Narendran SFirst Published Jan 21, 2022, 6:42 PM IST
Highlights

தஞ்சையில் உள்ள திருக்காட்டுப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் மாணவி அளித்துள்ள மரண வாக்குமூலம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தஞ்சையில் உள்ள திருக்காட்டுப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் மாணவி அளித்துள்ள மரண வாக்குமூலம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம், வடுகபாளையம் கீழத்தெருவைச் சேர்ந்தவர் முருகானந்தம். இவரின் முதல் மனைவி கனிமொழி, எட்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்தத் தம்பதியருக்கு 17 வயதில் ஒரு மகள். முதல் மனைவி இறந்த பின்பு, முருகானந்தம் சரண்யா என்பவரை இரண்டாவதாகத் திருமணம் செய்துகொண்டார். இதைத் தொடர்ந்து, முருகானந்தம் தன் மகளை தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்பட்டி தூய இருதய மேல் நிலைபள்ளியில் 8ம் வகுப்பில் சேர்த்துவிட்டார். அவர், பள்ளி வளாகத்திலுள்ள செயின்ட் மைக்கேல் மகளிர் விடுதியில் தங்கிப் படித்துவந்தார். தற்போது அவர் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 9 ஆம் தேதி விடுதியிலேயே விஷம் குடித்து தற்கொலை செய்துக்கொண்டார். மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கு விடுதி வார்டனின் தொல்லையே காரணம் என்று முதற்கட்ட தகவல்கள் வெளியாகின. பின்னர், மாணவியை மதம் மாற்றம் செய்ய வற்புறுத்தியதாலே மாணவி தற்கொலை செய்துகொண்டதாக வீடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தநிலையில், மாணவி அளித்த இறுதி வாக்குமூலம் தற்போது வெளியாகி மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில், மருத்துவமனையில் நீதித்துறை நடுவர் பெற்ற மரண வாக்குமூலத்தில் அந்த மாணவியிடம் உங்கள் பெயர், எந்த வகுப்பு, உங்கள் அம்மா அப்பா என்ன செய்கிறார்கள் என்ற அடிப்படை கேள்விகளை முன்வைக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, முழு மனதோடு தான் இந்த வாக்குமூலம் அளிக்க விருப்பமா என்று கேட்டதற்கு அந்த மாணவியும் ஆம் என்று பதில் அளித்துள்ளார்.

அதை தொடர்ந்து, யாரின் கட்டாயத்தில் அல்லது சொல்லிகொடுத்து வாக்குமூலம் அளித்தீர்களா என்ற கேள்விக்கு இல்லை என்றும் பதில் அளித்துள்ளார்.  பின்னர் மாணவி வாக்குமூலம் அளிக்க தகுதியானவர் என்பதை அறிந்துகொண்ட நீதித்துறை நடுவர், அருகில் மருத்துவர் மற்றும் செவிலியர் இருக்கும் தகவலை தெரியபடுத்திக்கொண்டு வாக்குமூலத்தை பெற்றுக்கொண்டார். மாணவி அளித்த வாக்குமூலத்தில், தஞ்சையில் உள்ள திருக்காட்டுப்பள்ளியில் 8 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்து வருகிறேன். எங்கள் ஊர் வெகுதொலைவில் உள்ளத்தால் இந்த பள்ளியில் உள்ள விடுதியில் கடந்த 5 வருடமாக தங்கி பள்ளிக்கு சென்று படிப்பை மேற்கொண்டேன். அந்த ஹாஸ்டலில் வார்டன் சிஸ்டர் என்னிடம் மட்டும் எப்பொழுதும் ஹாஸ்டல் கணக்கு வழக்குகளை பார்க்க சொல்வார். என்னை எப்பொழுது எதாவது சொல்லி திட்டியும், அடித்து கொண்டே இருப்பார். அனைவரும் விடுமுறை நாட்களில் வீட்டுக்கு சென்றாலும் என்னை மட்டும் அனுப்பமாட்டார். எனது வீட்டில் இருந்து ஏன் அனுப்பவில்லை என்று கேட்டாலும் அவள் இங்கு இருந்தால்தான் ஒழுங்கா படிப்பாள் என்றும் கூறுவார்.  ஒரு சில நேரத்தில் நான் படிக்க வேண்டும் என்று தெரிவித்தாலும் தொடர்ந்து ஹாஸ்டல் கணக்கு வழக்குகளை பார்க்க சொல்லி அடிப்பார். கடந்த நாலு வருசமா நீ தான பார்த்த, இந்த வருசமும் நீயே பாரு என்று வார்டன் தொல்லை கொடுத்தார். அதேபோல், கிறிஸ்மஸ் பண்டிகையின்போது அனைவரும் ஊருக்கு சென்றாலும் ஏதோ ஒரு காரணம் சொல்லி என்னை ஊருக்கு அனுப்பாமல் கணக்கு வழக்குகளை பார்க்க சொல்வார். இன்னும் ஒரு வருடம் தான் படிப்பு உள்ளது, நான் படிக்க வேண்டும் என்ற காரணத்தில் பொறுத்து கொண்டேன்.  உடம்பு சரியில்லை என்றாலும் ஊருக்கு விடமாட்டார்.

ஹாஸ்டலில் பீஸ் கட்டிவிட்டாலும் ஒழுங்காக உணவுகளை தரமாட்டார். திருச்சியில் உள்ள ஹாஸ்டேஜ் அழைத்து சென்று அங்கு உள்ள கணக்குகளையும் பார்க்க சொல்வார். தொடர்ந்து காரணமே இல்லை என்றாலும் திட்டுவார்.  ஹாஸ்டலில் எந்தவொரு பொருள் காணவில்லை என்றாலும் என் மீது குற்றம் சுமத்துவார். கடந்த 9ம் தேதியன்று ஹாஸ்டலில் இருந்த பூச்சிமருந்து எடுத்து குடித்துவிட்டேன். அது யாருக்கும் தெரியாது. உடனே எனக்கு வாந்தி வந்துவிட்டது. என் வாயில் இருந்து பச்சை நிறத்தில் ஏதோ ஒரு திரவம் வெளியேறியது. அதுபற்றி என்னிடம் கேட்டதற்கு எதுவும் சொல்லவில்லை. அடுத்தநாளான 10ம் தேதி உடம்பு சரியில்லை என்று ஊருக்கு சென்றேன். அங்கு சென்றதும் எனக்கு வாய்,நாக்கு,தொண்டையில் எரிச்சலாக இருந்தது. இதன் காரணமாக மெடிக்கல் மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன். இருந்தும், தொடர்ந்து அந்த எரிச்சல் என் வயிற்றில் பரவ தொடங்கியது. இதனால் எரிச்சல் தாங்க முடியாமல் மருந்து குடித்ததை வீட்டில் சொன்னேன். அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். என் நிலைமைக்கு அந்த வார்டன்தான் காரணம். அவர் என்னை தொடர்ந்து கணக்கு வழக்கு பார்க்க சொன்னதால்தான் இந்த முடிவுக்கு வந்தேன் என்று அந்த மாணவி மரண வாக்குமூலத்தில் தகவல் தெரிவித்துள்ளார். இதனிடையே தஞ்சை மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் பள்ளி வார்டன் மாணவியை மதமாற்றம் செய்ய முயன்றதாக தகவல் இல்லை என்று தஞ்சாவூர் எஸ்பி ராவலி இன்று காலை தெரிவித்திருந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள மாணவியின் மரண வாக்குமூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

click me!