Sunday lockdown in Tamilnadu: வெளியூர் செல்பவர்கள் கவனத்திற்கு.. ஆட்டோ, கால்டாக்சி குறித்து முக்கிய அறிவிப்பு

By Thanalakshmi VFirst Published Jan 21, 2022, 5:20 PM IST
Highlights

முழு ஊரடங்கில் வெளியூர்களிலிருந்து வரும் பயணிகளின் நலன் கருதி, சென்னை சென்ட்ரல், எழும்பூர் இரயில் நிலையங்கள் மற்றும் கோயப்பேடு பேருந்து நிலையம் போன்ற இடங்களில் வழக்கமான ஆட்டோக்கள் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 

தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனையடுத்து தமிழக அரசு சார்பில் பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கபட்டன. இரவு நேர ஊரடங்கு, முழு ஊரடங்கு, கடற்கரை செல்ல தடை, பூங்காக்கள் இயங்க அனுமதி உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன. தியேட்டர், வணிகவளாகங்கள், உணவகங்கள், கடைகள் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் ஒரு நேரத்தில் 50 % பேருக்கு மட்டும் அனுமதியளிக்கபட்டுள்ளது. அந்த வகையில் கடந்த இரண்டு வாரங்களாக வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பொங்கல் பண்டிகைக்கு பிறகு அதிகரித்து வரும் கொரோனா தொற்றினால், இந்த வாரமும் முழு ஊரடங்கு போடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வரும் 23 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முழு ஊரடங்கு நாளில் கடந்த 16-1-2022 (ஞாயிற்றுக்கிழமை) அன்று  நடைமுறைப் படுத்தப்பட்ட அதே அந்தியாவசிய செயல்பாடுகள் அனுமதிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் முழு ஊரடங்கில் ஏற்கனவே தடை செய்யப்பட்ட செயல்பாடுகளுக்கான தடைகள் தொடரும் என சொல்லப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில்,பேருந்துகள், மெட்ரோ ரயில்கள் உள்ளிட்ட பொது போக்குவரத்து சேவை இருக்காது. கேளிக்கை சார்ந்த அனைத்து செயல்பாடுகளுக்கும் முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. மதுபானக் கடைகள், மொபைல் கடைகள் உள்ளிட்ட அத்தியாவசியமற்ற கடைகள் அனைத்துக்கும் முழு தடை விதிக்கப்படுகிறது. அதேபோல வழிபாட்டுத்தலங்களுக்கு அனுமதியில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் முழு ஊரடங்கில் வெளியூர் செல்பவர்கள் மற்றும் சொந்த ஊர் திரும்பவர்களை கருத்தில் கொண்டு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அது,வெளியூர்களிலிருந்து வரும் பயணிகளின் நலன் கருதி, சென்னை சென்ட்ரல், எழும்பூர் இரயில் நிலையங்கள் மற்றும் கோயப்பேடு பேருந்து நிலையம் போன்ற இடங்களில் வழக்கமான ஆட்டோக்கள், செயலி மூலம் முன்பதிவு செய்து இயக்கப்படும் வாடகை கார்கள் பயணிகளை ஏற்றிச் செல்ல அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இதே போல், மாவட்ட இரயில் நிலையங்களுக்கும் மற்றும் வெளியூர் பேருந்து நிலையங்களுக்கும் இது பொருந்தும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கொரோனா தொற்றிலிருந்து மக்களைக் காத்திட அரசு மேற்கொள்ளும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

click me!