இரு வருடங்களில் சாலைகளை செப்பனிடாத, புதிய சாலைகளை அமைக்காத அரசின் மெத்தனத்தை, அலட்சியத்தை மக்கள் வயிறெரிந்து சாபம் கொடுத்து கொண்டிருக்கிறார்கள்.
சென்னையில் பெய்த கனமழையால் தெருக்களில் தண்ணீரை பார்த்துக்கொண்டிருந்தவர்கள் இப்போது தெருக்களையே பார்க்க முடியவில்லை என நாராயணன் திருப்பதி விமர்சனம் செய்துள்ளார்.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று காலையில் சென்னையில் விட்டுவிட்டு மழை பெய்து வந்த நிலையில் மாலை கனமழை வெளுத்து வாங்கியது. இதனால், பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும், குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். இந்நிலையில், சென்னை சீர்குலைந்து, சீரழிந்து காட்சியளிப்பதை திமுக அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.
இதையும் படிங்க;- கலாச்சார சீர்கேட்டின் உச்சத்தில் சென்னை.. நேரம் கடந்து பப் திறந்து வைத்தது யார் குற்றம்? நாராயணன் திருப்பதி!
இதுதொடர்பாக பாஜக மாநில துணைத்தலைவர்எக்ஸ் தளத்தில்;- இன்றைய ஒரு நாள் மழையில் திக்கு முக்காடி திணறிக்கொண்டிருக்கிறது சென்னை மாநகரம். நாங்கள் யார் தெரியுமா? திராவிட மாடல் தமிழகத்தை சீரமைத்து விட்டது என்று மார்தட்டி கொண்டிருந்தவர்கள், இன்று சென்னை சீர்குலைந்து, சீரழிந்து காட்சியளிப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இது வரை தெருக்களில் தண்ணீரை பார்த்துக்கொண்டிருந்தவர்கள் இப்போது தெருக்களையே பார்க்க முடியவில்லை.
மேடும், பள்ளமும், குழிகளும் பாதசாரிகளை, இரு சக்கர வாகன ஓட்டிகளை பதம் பார்த்து கொண்டிருக்கின்றன. மக்கள் தவித்து கொண்டிருக்கின்றனர். இரு வருடங்களில் சாலைகளை செப்பனிடாத, புதிய சாலைகளை அமைக்காத அரசின் மெத்தனத்தை, அலட்சியத்தை மக்கள் வயிறெரிந்து சாபம் கொடுத்து கொண்டிருக்கிறார்கள். புலம்பி கொண்டே, அச்சத்துடன் வீடு திரும்புகிறார்கள். மழை நீர் வடிகால்வாய் அமைத்து விட்டோம் என்று சொன்னவர்கள், பாதி சாலைகளை ஆக்கிரமித்து அவை அமைக்கப்பட்டதை கண்டும் காணாமல் விட்டதன் காரணமே இன்றைய நிலை. தெருவெங்கும் பள்ளம், எல்லாம் குழி என்ற பதைபதைப்புடன் வீடு சேர துடித்து கொண்டிருக்கிறான் சென்னை வாசி.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
ஆனால், இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் மாநில உரிமை, மொழி அரசியல், சனாதன தர்மத்தை ஒழிப்போம், நீட் ஒழிப்பு என்றெல்லாம் மடைமாற்றி கொண்டே காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கிறது திராவிட மாடல் அரசு என நாராயணன் திருப்பதி கடுமையாக விமர்சித்துள்ளார்.