மீண்டும் விடிய விடிய கொட்டித் தீர்த்த பெரு மழை ! சென்னையில் கொண்டாட்டம் !!

By Selvanayagam PFirst Published Sep 20, 2019, 8:33 AM IST
Highlights

தெற்கு அந்தமான கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்தம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னையின் பல்வேறு இடங்களில் விடிய, விடிய  மழை பெய்து வருகிறது. ஏற்கனவே நேற்றும் மழை கொட்டி தீர்த்த நிலையில் இன்றும் மழை பெய்து வருவது சென்னை மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்தம் காரணமாக  சென்னை உட்பட தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த  3 நாட்களுக்கும்  மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து தெற்கு மற்றும் தென்கிழக்கு  வங்கக் கடல் பகுதிக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று மீனவர்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர். 

வளி மண்டல மேலடுக்கு காற்று சுழற்சியானது வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளதால், வட தமிழகத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. 

இந்நிலையில் வளிமண்டல காற்று சுழற்சி கடலோரப் பகுதியில் நிலை இருப்பதால் வட தமிழகத்தில் மேலும் மழை நீடிக்கு நிலை ஏற்பட்டுள்ளது.  இது தவிர வங்கக் கடலில் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் ஒரு காற்றழுத்தம் உருவாகியுள்ளது. 

இதன்  காரணமாக மேலும் சில நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்யும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, அரியலூர், திருச்சி, பெரம்பலூர், தஞ்சவூர், திருப்போரூர், நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம்,  திருவண்ணாமலை, காரைக்கால் ஆகிய இடங்களில்  கனமழை பெய்யும். 

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் இலங்கைக்கு வடகிழக்கு திசையில் மையம் கொண்டுள்ள காற்றழுத்தம் காரணமாக, தமிழக கடலோர துறைமுகங்களான சென்னை,  கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், புதுச்சேரி, காரைக்கால் துறைமுகங்களில் காற்றழுத்ததை குறிக்கும் குறைந்த பட்ச எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளன.

இதனிடையே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னையின் பல்வேறு இடங்களில் விடிய விடிய மழை பெய்து வருகிறது.. சைதாப்பேட்டை, கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், மீனம்பாக்கம், போரூர் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது. இந்த மழையால் சென்னை மக்கள் பெரு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

click me!